தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று காலை மார்ச் 5ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. All Party meeting Stalin
மக்கள் தொகை அடிப்படையில் நடைபெற இருக்கிற மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு பல தொகுதிகளை இழக்கும் அபாயம், இந்தி திணிப்பு, மொழிக் கொள்கை, கல்வி நிதி உள்ளிட்ட மாநில அரசுக்கு மத்திய அரசு தரவேண்டிய பல்வேறு நிதிகளில் தாமதம் உள்ளிட்ட விவகாரங்கள் பற்றி இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
அனைத்து கட்சி கூட்டத்தில் ஆளும் கட்சியான திமுக, முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக முதல் மிக சமீபத்தில் தொடங்கப்பட்ட தவெக வரை 40 க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று பகல், தலைமைச் செயலகத்தில் இருக்கக்கூடிய நாமக்கல் கவிஞர் மாளிகையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் இடத்தை ஆய்வு செய்தார்.
நேற்று இரவு வரை அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடர்பான முக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருந்தார் முதலமைச்சர்.
இந்த கூட்டத்துக்குப் பிறகு அடுத்த கட்டமாக என்னென்ன நடவடிக்கைகளில், முதலமைச்சர் ஈடுபடுவார் என கோட்டை வட்டாரங்களில் விசாரித்தோம்.
“இதை திமுகவின் பிரச்சினையாகவோ, திமுக கூட்டணியின் பிரச்சனையாகவோ யாரும் பார்க்க வேண்டாம். தமிழ்நாட்டின் பிரச்சினையாக தான் இதை அணுகுகிறோம் என்று முதலமைச்சர் தொடர்ந்து சொல்லி வருகிறார். இன்னும் சொல்லப்போனால் இது தென்னிந்தியாவின் பிரச்சனை.
அனைத்து கட்சி கூட்டத்தில் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை அறிந்து இது தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன.
இதன் அடுத்த கட்டமாக அனைத்துக் கட்சி தலைவர்களோடு டெல்லி சென்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, தமிழ்நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளைப் பற்றி மெமொரண்டம் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்கிறார்கள். All Party meeting Stalin