தமிழ்நாட்டில் கடைகள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் 24 மணிநேரமும் திறந்திருக்கும் அனுமதி மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்கிற அரசாணை ஒன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது. இந்த அரசாணை முழுவதும் ஆங்கிலத்தில் மட்டுமே இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டுத் துறையின் செய்தி அறிக்கையை செய்தி மக்கள் தொடர்புத் துறை தமிழில் வெளியிட்டிருக்கிறது.அந்த அறிக்கையில், தமிழக முதல்வர் கடந்த மே 6-ந் தேதி அன்று 42-வது வணிகர் தினத்தையொட்டி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் மதுராந்தகத்தில் நடைபெற்ற மாநாட்டில், பொதுமக்களின் நலன் கருதி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை, வரும் ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைவதால் இதனை மேலும், 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து அரசாணை வெளியிடப்படும் என அறிவித்தார்.
தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கிணங்க, பொதுமக்களின் நலன் கருதி, 10 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களை பணியமர்த்தியுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அனுமதி அளிக்கப்பட்டு, ஜூன் 5ம் தேதி முதல் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வணிகர்களும், பொதுமக்களும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அரசாணை கடந்த மே 8-ந் தேதி வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில், “விசுவாச வருடம், சித்திரை 25, திருவள்ளூவர் ஆண்டு 2056” என்பதைத் தவிர அனைத்துமே ஆங்கிலத்தில்தான் உள்ளது.
இந்த அரசாணை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர்தான் தமிழ்நாடு அரசு, அரசாணைகள் அனைத்துமே தமிழில்தான் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அதாவது, அனைத்து அரசு அதிகாரிகள்- ஊழியர்கள் தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை முழுமையாகப் பின்பற்ற வேண்டும்; அரசாணைகள் தமிழில் மட்டுமே இருக்க வேண்டும்; சுற்றாணைக் குறிப்புகள் தமிழில்தான் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 24 மணிநேரமும் கடைகளை திறந்திருக்கும் தற்போதைய அரசாணை முழுவதும் ஆங்கிலத்திலேயே இடம் பெற்றிருக்கிறது. அப்படியானால் தமிழில்தான் அரசாணைகள் இருக்க வேண்டும் என்கிற உத்தரவு காற்றில் பறந்துவிட்டதா? என ஆதங்கப்படுகின்றனர் தமிழார்வலர்கள்.