அனைத்து பேருந்துகளும் இனி கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே : சிவசங்கர்

Published On:

| By christopher

தென்மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் நாளை (ஜனவரி 30) முதல் கிளாம்பாக்கம் மற்றும் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு பயணம் செய்யும் பயணிகளின் வசதிக்காகவும், சென்னை மக்களின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காகவும், வண்டலூரை அடுத்து கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை கடந்த மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இதில் முதற்கட்டமாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் (SETC) அனைத்து தடப் பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. பின்னர் ஜனவரி 24-ம் தேதி முதல் தனியார் ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக வரும் ஜனவரி 30ஆம் தேதி (நாளை) முதல் தென் மாவட்டங்களுக்கு செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக செல்லும் அனைத்து போக்குவரத்து கழகங்களை சார்ந்த 710 பேருந்துகளும் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும். மேலும், 160 பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையம்!

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செங்கல்பட்டு திண்டிவனம் வழியாக தென்மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நாளை முதல் இயக்கப்பட மாட்டாது.

அதேவேளையில் இசிஆர் வழியாக செல்லும் பேருந்துகளும், பூந்தமல்லி வழியாக வேலூர், ஓசூர், ஆம்பூர் , திருப்பத்தூர்  இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

மேற்கண்ட பேருந்து இயக்கம் மாற்றத்தில் பயணிகளின் வசதிக்காக விழுப்புரம் போக்குவரத்து கோட்ட பேருந்துகள் மட்டும் தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி செல்லும் போது, தாம்பரம் வரை இயக்கப்பட்டு பின் அங்கிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

நிதிஷின் அரசியல் ஆயுட்காலம் : அடித்து சொல்லும் பிரஷாந்த் கிஷோர்

7 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share