உதயசங்கரன் பாடகலிங்கம்
ஹாலிவுட் நாயகிகளைப் போன்றிருக்கும் ஆலியா பட்!
விழாக் காலங்களில் நட்சத்திர நடிகர், நடிகைகளின் படங்கள் வெளியாவதென்பது தொடர்ந்து எல்லா மொழிகளிலும் காலம்காலமாக நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. அந்த வகையில் விஜயதசமியை ஒட்டி இந்தியில் வெளியாகியிருக்கிறது ’ஜிக்ரா’.
ஆலியா பட் முதன்மை பாத்திரத்தில் இடம்பெற்றுள்ள இந்தப் படத்தில் வேதாங் ரெய்னா, மனோஜ் பாஹ்வா, விவேக் கோம்பர் உடன் ராகுல் ரவீந்திரனும் முக்கிய வேடமொன்றில் நடித்திருக்கிறார். ’மோனிகா ஓ மை டார்லிங்’ தந்த வாசன் பாலா இதனை இயக்கியிருக்கிறார்.
அடையாளம் தெரியாத ஆசிய நாட்டுச் சிறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஒரு இளைஞனை மீட்க, அவரது சகோதரி சிறையைத் தகர்க்கத் தயாராவதைச் சொன்னது இப்படத்தின் ட்ரெய்லர். உண்மையிலேயே படமும் அப்படியொரு கதையைத் தான் கொண்டிருக்கிறதா? எப்படியிருக்கிறது இந்தப் படம் தரும் அனுபவம்?
காக்கும் சகோதரி!
சிறு வயதில் தந்தையின் தற்கொலையைத் தனது தம்பி அங்குர் ஆனந்த் உடன் சத்யா காண நேரிடுகிறது. அந்த நிகழ்வின்போது, தனது சகோதரனின் முகத்தை மூடி அவர் அதனைக் காணவிடாமல் செய்கிறார். வளர்ந்தபின்னும் அது தொடர்கிறது.
சகோதரனுக்கு எந்த துன்பமும் நேர்ந்துவிடாமல் காப்பது தனது கடமை என்று நம்புகிறார் சத்யா (ஆலியா பட்). அதற்கேற்ப, சகோதரியை உயிராக எண்ணுகிறார் அங்குர் ஆனந்த் (வேதாங் ரெய்னா). எந்தவொரு தவறாத செயல்களிலும் ஈடுபடாதவராக, ஒழுக்கமானவராக வளர்கிறார்.
இருவரும் மலேசியா போன்றதொரு ஆசிய நாட்டில் (பெயர் குறிப்பிடப்படவில்லை) வாழ்ந்து வருகின்றனர். உறவினர் ஒருவரது நிறுவனத்தில் வேலை பார்ப்பதோடு, அவரது குடும்பப் பிரச்சனைகளைத் தீர்ப்பவராகவும் இருக்கிறார் சத்யா.
இந்த நிலையில், உறவினரின் மகன் கபீர் உடன் இணைந்து ஹன்சி தாவோ எனும் நாட்டுக்கு (கற்பனையான நாடு) செல்கிறார் அங்குர் ஆனந்த். அதுவொரு வர்த்தகரீதியிலான பயணம்.
அங்கு சென்றபிறகு, வழக்கமான ஒப்பந்த நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு இருவரும் பார்ட்டி, பப் என்று சுற்றுகின்றனர். திரும்பி வரும் வழியில் அவர்களை அந்நாட்டு போலீசார் சுற்றி வளைக்கின்றனர். இருவரையும் சோதனையிடுகின்றனர்.
அப்போது, கபீரிடம் இருந்து போதைப்பொருளைக் கண்டெடுக்கின்றனர் போலீசார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அந்த உறவினர் தனது நிறுவனத்திலுள்ள தலைமை வழக்கறிஞரை அந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கிறார். கபீரைச் சந்தித்துப் பேசுகிறார்.
‘அங்குர் ஆனந்த் தான் அந்த போதைப்பொருளை என் பாக்கெட்டில் வைத்ததாகச் சொன்னால் போதும்’ என்று கபீரிடம் அவர் சொல்கிறார். அதனை கபீர் ஏற்க மறுக்கிறார்.
அதேநேரத்தில், அங்குரைச் சந்தித்து ‘இதனைச் செய்தது நான் தான்’ என்று ஒப்புக்கொள்ளுமாறு கூறுகிறார். ‘மூன்று மாதச் சிறை தண்டனை தான் கிடைக்கும்’ என்று சொல்லிச் சம்மதிக்க வைக்கிறார். உறவினர்கள் ஆதரவில் தானும் சகோதரியும் வாழ்ந்து வருவதால், அங்குருக்கு வேறு வழி தெரியவில்லை.
நீதிமன்றத்தில் வழக்கை விசாரிக்கும் நீதிபதி, அங்குரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தபிறகு தண்டனையை அறிவிக்கிறார். அதன்படி, இன்னும் மூன்று மாதங்களில் நாற்காலியில் மின்சாரம் பாய்ச்சி மரணிக்கும் தண்டனையை எதிர்கொள்ள வேண்டுமென்று தீர்ப்பு வழங்குகிறார்.
அதனைக் கேட்டதும் அதிர்ச்சியடைகிறார் அங்குர் ஆனந்த். மூன்று மாதங்களில் விடுதலை ஆகலாம் என்று சொல்லித் தன்னை இவ்வழக்கில் ஒப்புக்கொள்ள வைத்ததாகக் கதறுகிறார்.
நடந்ததை எல்லாம் அறியும் சத்யா, தனது சகோதரனைச் சிறையில் இருந்து விடுவிப்பதற்காக அந்த நாட்டுக்குச் செல்கிறார். சட்ட விதிமுறைகளின்படி அவரைக் காப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். எதுவும் பலன் தருவதாக இல்லை.
சிறையில் தலைமை அதிகாரியான ஹன்ஸ்ராஜ் லண்டாவைச் (விவேக் கோம்பர்) சந்திக்கிறார் அங்குர் ஆனந்த். இந்திய வம்சாவளியினர் என்றெண்ணி அவரிடம் உதவி கேட்கிறார். அவருக்கு மொழி மட்டுமல்ல, அங்குரின் உணர்வும் புரிவதாக இல்லை. அதனால், அங்குர் அச்சிறையில் பெருஞ்சிக்கலை எதிர்கொள்கிறார்.
அந்தச் சூழலில், ஒருகாலத்தில் கேங்க்ஸ்டராக இருந்த சேகர் பாட்டியாவையும் (மனோஜ் பாஹ்வா), முன்னாள் போலீஸ் அதிகாரியான முத்துவையும் (ராகுல் ரவீந்திரன்) சந்திக்கிறார் சத்யா.
சேகர் தனது மகனைச் சிறையில் இருந்து வெளியே கொணர முயற்சிக்கிறார்; முத்து தான் தவறுதலாகக் கைது செய்த ஒரு நபரைக் காக்கச் சட்டப் போராட்டம் நடத்துகிறார்.
இவர்கள் சம்பந்தப்பட்ட மூன்று பேருமே இன்னும் சிறிது காலத்தில் மரண தண்டனையை எதிர்கொள்ளவிருக்கின்றனர். சட்டப்பூர்வமாக அவர்களை வெளியே கொண்டுவர முடியாதபடி, அந்நாட்டில் விசாரணை முறைகள் இறுக்கமாக இருக்கின்றன.
அதனால், சிறையில் இருந்து சட்டவிரோதமாக அவர்களை வெளியே கொண்டுவருவது என்று அவர்கள் முடிவு செய்கின்றனர். அதனைச் செயல்படுத்தும்போது, மேலும் பல சிக்கல்களை மூவரும் எதிர்கொள்கின்றனர்.
அதனை மீறி, அவர்களால் அதனைச் செயல்படுத்த முடிந்ததா, சகோதரன் அங்குர் ஆனந்தை சத்யா மீட்டாரா என்று சொல்கிறது ‘ஜிக்ரா’ படத்தின் மீதி.
சில மாதங்களுக்கு முன்னர் ‘சாவி’ என்ற இந்திப் படம் வெளியானது. அதில், பிரிட்டன் சிறையில் தவறுதலாகத் தண்டனைக் கைதியாக வதைபட்டு வரும் தனது கணவனை மீட்க மனைவி ‘சிறை தகர்ப்பில்’ இறங்குவதாகக் காட்டப்பட்டிருந்தது.
’எனிதிங் ஃபார் ஹெர்’ என்ற பிரெஞ்சு படத்தின் தழுவல் அது. ‘தி நெக்ஸ்ட் த்ரீ டேஸ்’ என்ற பெயரில் ரஸ்ஸல் க்ரோ ஆங்கிலத்தில் நடித்திருந்தார். அந்தப் படங்களில் சிறையில் இருக்கும் மனைவியை விடுவிக்கக் கணவர் முயற்சிப்பது போன்று கதை அமைந்திருக்கும். சாவியில் கணவனை மீட்க மனைவி முயற்சித்தது போன்று ‘ஜிக்ரா’வில் சகோதரனை மீட்கச் சிறையைத் தகர்க்கச் செல்கிறார் சகோதரி.
ஒன் வுமன் ஷோ!
படம் முழுக்க நாயகன் வருவதை எவ்வாறு ‘ஒன் மேன் ஷோ’ என்று சொல்வோமோ, அதே போன்று ‘ஜிக்ரா’ முழுமையாக ‘ஒன் வுமன் ஷோ’ ஆக இருக்கிறது. ஆலியா பட் படம் முழுவதும் வியாபித்திருக்கிறார். அவரது நடிப்பு அதற்கேற்றாற் போன்று அமைந்திருப்பது சிறப்பு.
வேதாங் ரெய்னாவுக்கு இதில் சோகமான பாத்திரம். அதனை உணர்ந்து, ஒரு வளர்ந்த குழந்தையாகப் படத்தில் தென்படுகிறார்.
விளம்பரங்களில், சீரியல்களில் ஒரு உடல் பருமன்மிக்க, நடுத்தர வயது நபராகத் தோற்றமளிப்பவர் மனோஜ் பாஹ்வா. இதில் அவர் ஒரு கேங்க்ஸ்டராக வருகிறார். ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைப்பதோடு, கிளைமேக்ஸில் ’சீரியசாக’ உணரச் செய்கிறார்.
’மாஸ்கோவின் காவேரி’யில் அறிமுகமான ராகுல் ரவீந்திரன், சமீபகாலமாகத் தெலுங்கில் அதிகமாக நடித்து வருகிறார். அவரது இந்தி அறிமுகமாக இப்படம் உள்ளது. கதைக்கும் கதாபாத்திரத்திற்கும் ஏற்ற வகையில் அவரது நடிப்பு அமைந்திருக்கிறது.
இந்தப் படத்தில் வில்லனாக வரும் விவேக் கோம்பர் மிகச்சில காட்சிகளில் வந்தாலும், திரையில் மிரட்டல் நடிப்பைத் தந்திருக்கிறார்.
இவர்கள் தவிர்த்து சுமார் ஒன்றரை டஜன் பேராவது இதில் முகம் காட்டியிருப்பார்கள்.
ஸ்வப்னில் சோனாவானேயின் ஒளிப்பதிவு இப்படத்திற்குப் பலமாக அமைந்திருக்கிறது. ‘ரொம்பவே சீரியசான ஒரு ஆக்ஷன் படம் பார்க்கிறோம்’ என்கிற உணர்வை கேமிரா கோணங்களும், பிரேம்களில் நிறைந்திருக்கும் குறிப்பிட்ட வண்ணங்களும் ஏற்படுத்துகின்றன.
பிரேர்னா சைகலின் படத்தொகுப்பு காட்சிகளைக் கனகச்சிதமாக ‘கட்’ செய்திருக்கிறது. ஆனாலும், பின்பாதியில் காட்சிகள் ரொம்பவே இழுவையாக அமைந்திருக்கின்றன.
ஆடம்பரமான, உயர் நடுத்தர வர்க்க வாழ்வைக் காட்டுவதிலும், வெளிநாட்டுச் சிறை தரும் இறுக்கமான அனுபவத்தை உணர்த்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது முகுந்த் குப்தாவின் தயாரிப்பு வடிவமைப்பு.
விக்ரம் தாஹியாவின் சண்டைக்காட்சி வடிவமைப்பு இப்படத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது.
அச்சிந்த் தாக்கரின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். அவற்றைவிடப் பரபரப்பூட்டுகிற வேலையை எளிதாகச் செய்யும் பின்னணி இசை நம்மை ஈர்க்கிறது.
காட்சிகளுக்குத் தேவையான பொருட்செலவு மட்டுமல்லாமல், அதன் உள்ளடக்கத்தைச் சிறப்பாக ஆக்குவதற்கான அனைத்தையும் பார்த்து பார்த்து இழைத்திருக்கிறார் இயக்குனர் வாசன் பாலா. அதில் குறையேதும் இல்லை.
அந்த வகையில், தான் எடுத்துக்கொண்ட கதையை நன்றாகவே காட்சியாக்கம் செய்திருக்கிறார். ஆனால், அது ரசிகர்களை ஈர்க்குமா, அதற்கேற்றவாறு அது அமைந்திருக்கிறதா என்ற கேள்விகளை மட்டும் அவர் மறந்துவிட்டார். அதுவே இப்படத்தின் பலவீனம்.
சிலவற்றைத் தவிர்த்திருக்கலாம்!
குற்றம் செய்தவரை விட்டுவிட்டு ஒரு அப்பாவி தண்டனைக்கு உள்ளாவதைச் சொல்வதுதான் இக்கதையின் மையம். இதில், அப்படியொரு நிலைமைக்கு நாயகியின் சகோதரனை ஆக்கியது அவரது உறவினர்கள் தான். அவர்களைப் பற்றிய விவரங்கள் இதில் போதுமான அளவுக்கு இல்லை. குறிப்பாக, அவர்கள் மீது வெறுப்பை உமிழும் அளவுக்கு, நாயகியின் தரப்பு மீது இரக்கப்படும் அளவுக்குத் திரைக்கதையில் விஷயங்கள் இல்லை.
இப்படத்தின் முதல் அரை மணி நேரக் காட்சிகள், முழுக்க ஆலியா பட் பாத்திரத்தின் மனநிலையை, குணாதிசயங்களை விளக்குவதாக இருக்கின்றன. அதனைத் தொடர்ந்து, கதையின் முடிச்சு நமக்கு உணர்த்தப்படுகிறது.
அந்த சிக்கலை விடுவிப்பதற்கான முயற்சியில் நாயகி இறங்குவதிலும் குறை ஏதும் இல்லை. ஆனால், கடுமையான சட்ட விதிகள் பின்பற்றப்படுகிற ஒரு நாட்டில் நாயகி எதிர்கொள்கிற பிரச்சனைகள் என்னவென்று இப்படம் பேசவே இல்லை. அதனைக் காட்டியிருந்தால் மட்டுமே, அவரது சகோதரர் பாத்திரம் மீதான அனுதாபம் கூடியிருக்கும்.
போலவே, ‘ஜஸ்ட் லைக் தட்’ சிறையைத் தகர்ப்பதென்பது உண்மையில் நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாதது. இப்படம் தரும் காட்சியனுபவம் அப்படிப்பட்டதாகவே இருக்கிறது.
சம்பந்தப்பட்ட வெளிநாட்டுக்குச் சென்றபிறகு, பல நாட்கள் சட்டப்பூர்வமாக நடவடிக்கைகளை மேற்கொள்ளப் படாத பாடு படுகிறார் நாயகி. அந்த நாட்கணக்கு திரைக்கதையில் சரிவரச் சொல்லப்படவில்லை.
உண்மையைச் சொன்னால், எல்லா இடத்திலும் நாயகி கேட்கும் உதவியைச் செய்ய முடியாமல் எதிரே இருப்பவர்கள் கையை விரிக்கின்றனர். அந்த நிலைமையில்தான், சிறையில் இருந்து சட்டவிரோதமாகச் சிலரை வெளியே கொண்டுவர முதன்மை பாத்திரங்கள் முடிவு செய்கின்றன. அக்காட்சியின் தாக்கம் போதுமான அளவுக்கு இல்லை.
வழக்கமாக, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ரொம்பவே பில்டப் உடன் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். இப்படத்தில், அதற்கு முன்னதாக ராகுல் ரவீந்திரன் உடன் ஆலியா பட் மோதுகிற காட்சியொன்று வருகிறது. அது, இப்படத்தின் ஆன்மாவையே குலைத்து விடுகிறது.
அது போதாதென்று, இறுதி சண்டைக்காட்சியில் பல சிறைக்கைதிகள், போலீசார் மடிவதாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘மூணு பேரை காப்பாத்த ஆறாயிரம் கொடூரக் கைதிகளை விடுதலை பண்ணப் போறியா’ என்று காட்சியொன்றில் ராகுல் ரவீந்திரன் பாத்திரம் நாயகியிடம் கேட்கும். ’எனக்கு என் தம்பிதான் முக்கியம்’ டைப்பில் நாயகி விளக்கமளித்தாலும், அக்காட்சி நம்மைத் திருப்திப்படுத்துவதாக இல்லை.
’லாஜிக்’ அடிப்படையில் சில கேள்விகளுக்கான திரைக்கதையில் இடம்பெற்றிருந்தபோதும், இயக்குனர் அவற்றை அடிக்கோடிட்டுக் காட்டவில்லை. அதனைச் செய்யாத காரணத்தால், ரசிகர்களான நாம் மறதியில் மாட்டிக் கொள்கிறோம்.
இப்படிச் சில சொதப்பல்கள் ‘ஜிக்ரா’வில் இருக்கின்றன. அதையெல்லாம் மீறி, தயாரிப்பில் கொட்டப்பட்டிருக்கும் அசுர உழைப்புக்காக இப்படத்தைக் காணலாம். கூடவே, ஹாலிவுட் நாயகிகளைத் திரையில் கண்டாற் போன்று ஆலியா பட் ‘ஸ்டைலாக’ நடித்ததையும் காணலாம். இப்படத்தைப் பார்த்துதான் அதனை உணர வேண்டுமென்பதில்லை. ட்ரெய்லரை கண்டாலே அது பிடிபடும். அதனை ரசிப்பவர்கள் இப்படத்தைக் கண்டு மகிழலாம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயவர்தனே ரிட்டர்ன்ஸ்: MI அணியின் தலைமை பயிற்சியாளராக நியமனம்!