மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
மேலவளவு படுகொலை நினைவு தினத்தையொட்டி, மேலவளவு கிராமத்தில் உள்ள நினைவிடத்தில் விசிக தலைவர் திருமாவளவன் இன்று (ஜூன் 30) அஞ்சலி செலுத்தினார்.
இதைதொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் விசிக பிரச்சாரம் மேற்கொள்ளும்.
கள்ளச்சாராய சாவுகள் தமிழ்நாடு மட்டும் இன்றி இந்தியா முழுவதும் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதற்கு முழு மதுவிலக்கு ஒன்றுதான் தீர்வு. அரசு மதுபானம் தீர்வாக இருக்க முடியாது. நச்சு சாராய சாவுகளால் ஏற்படுகிற பாதிப்பை விட, சட்டபூர்வமாக அரசு விற்பனை செய்கிற மதுபானங்கள் மனித வளத்தை பெரும் அளவில் சேதப்படுத்தும்.
இளம் தலைமுறையினர் ஆற்றல் இழந்து, செயலிழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது போன்ற பாதிப்புகள் தேசத்திற்கு பேரிழப்பு. ஆகவே மாநில அரசு மட்டும் இன்றி இந்திய அரசும் மதுவிலக்கு கொள்கை குறித்து பரிசீலிக்க வேண்டும்.
தேசிய அளவில் மதுவிலக்கு கொள்கையை அமல்படுத்தினால் தான் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க முடியும்.
மெத்தனால் சட்டவிரோதமாக சந்தையில் புழங்குகிறது. அதற்குப் பின்னால் இருக்கும் மாபியா கும்பலை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
அப்போது அவரிடம், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் அரசு நிவாரணம் கொடுத்துள்ளது, ஆனால் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் தான் கொடுத்திருக்கிறது என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு, பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று விசிக வலியுறுத்துகிறது என்று பதில் அளித்தார்.
மீண்டும் கள்ளுக்கடைகள் திறக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் கூறியிருக்கிறார் என்ற கேள்விக்கு, “காந்தியடிகள் கள்ளு உட்பட எந்த மதுவும் கூடாது என்றுதான் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவர்கள் முழு மதுவிலக்கு வேண்டும் என்று வலியுறுத்துவது தான் காந்திக்கு செலுத்துகிற நன்றி கடனாக இருக்க முடியும். கள்ளுக்கடையை திறக்கவேண்டுமென தமிழ்நாட்டில் கள்ளு உற்பத்தியாளர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்படுகிறது. முதலில் மதுமான கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். அதுதான் முதன்மையான கோரிக்கை” என்றார்.
நேற்று சட்டப்பேரவையில் பேசிய மதுவிலக்குத் துறை அமைச்சர் முத்துசாமி, தமிழ்நாட்டில் மது விலக்கிற்கு சாத்தியமில்லை என்று கூறியிருந்தார்.
அப்படி இல்லை என்றால் அரசு பதவி விலக வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள விசிக தலைவரும், மதுவிலக்கை அமல்படுத்த அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா