ஒரு படத்துக்கு ரெண்டு கிளைமேக்ஸா?

Published On:

| By uthay Padagalingam

akshay kumar housefull movie two climax

ஒரு திரைப்படத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கிளைமேக்ஸ் பகுதி படம்பிடிக்கப்பட்டு, ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ற ஒன்றைச் சேர்க்கத் திட்டமிட்டதாகத் திரையுலகில் சில தகவல்கள் சொல்லப்படுவதுண்டு. akshay kumar housefull movie two climax

‘பூவே உனக்காக’ படத்தில் விஜய், சங்கீதா பாத்திரங்கள் ஒன்றிணைவது போன்று ஒரு கிளைமேக்ஸ் உருவாக்கப்பட்டதாக, அப்படம் வெளியான காலகட்டத்தில் ஒரு தகவல் பரவியது.

ADVERTISEMENT
akshay kumar housefull movie two climax

’தளபதி’ படத்தில் மம்முட்டி பாத்திரம் இறப்பதாக, அதன் கிளைமேக்ஸ் பகுதி வடிவமைக்கப்பட்டிருக்கும். கேரளாவில் இப்படத்தின் கிளைமேக்ஸ் ரஜினி பாத்திரம் மரணிப்பது போன்று அமைந்திருந்ததாக, அந்நாட்களில் சொல்லப்பட்டது. பின்னர் அப்படம் சம்பந்தப்பட்டவர்கள் அக்கேள்விக்குத் தெளிவான பதிலைத் தந்தபிறகு, அது முழுப்பொய் என்று தெரிய வந்தது.

‘முகவரி’ படத்தில் இசையமைப்பாளராகும் வேட்கையோடு திரியும் அஜித் பாத்திரம், கிளைமேக்ஸில் அந்த கனவைச் சுமந்துகொண்டு ஒரு சாதாரண வேலைக்குச் செல்வதாக முடிவுற்றிருந்தது. ரசிகர்கள் அதனை ஏற்காத காரணத்தால், அப்படத்தில் இடம்பெற்ற சில ஷாட்களை ஒன்றிணைத்து ‘சுபமாக’ முடிவடைதாக மாற்றப்பட்டது.

ADVERTISEMENT

இப்படி ஒரு படத்தின் கிளைமேக்ஸ் தொடர்பாகப் பல தகவல்களை, கதைகளை, வதந்திகளை ரசிகர்கள் எதிர்கொண்டிருப்பார்கள்.

அந்த வரிசையில், புதியதொரு அனுபவத்தைத் தரப்போகிறது விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஹவுஸ்ஃபுல் 5’ இந்தி திரைப்படம்.

ADVERTISEMENT

தருண் மன்சுஹானி இயக்கியுள்ள இப்படத்திற்கு வி.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

அக்‌ஷய் குமார், ரிதேஷ் தேஷ்முக், அபிஷேக் பச்சன், ஜாகுலின் பெர்னாண்டஸ், சோனம் பாஜ்வா, நர்கீஸ் பக்ரி, பர்தீன் கான், சஞ்சய் தத், நானா படேகர் என்று பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடித்த இப்படமானது ஒரே நேரத்தில் இரண்டு கிளைமேக்ஸ் உடன் வெளியாகிறது.

அதற்கேற்ப ஹவுஸ்ஃபுல் ஏ, ஹவுஸ்ஃபுல் பி என்ற இரு பெயர்களில் இப்படம் தியேட்டர்களில் வெளியாகிறது.

ஒரு மல்டிபிளக்ஸ் தியேட்டரில் ஒரேநாளில் இரண்டு கிளைமேக்ஸுடன் இப்படத்தின் அடுத்தடுத்த காட்சிகள் திரையிடப்படுவது ரசிகர்களுக்கு உண்மையிலேயே ‘வித்தியாசமான’ அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படத்தைத் தயாரித்திருக்கும் சஜித் நாதியத்வாலா, கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ‘இரண்டு கிளைமேக்ஸ்’ ஐடியாவை செயல்படுத்த துடித்துக் கொண்டிருந்தாராம். அது ஹவுஸ்ஃபுல் படத்தின் ஐந்தாம் பாகத்தில் நிறைவேறியிருக்கிறது.

ஆனாலும், நம் மைண்ட்வாய்ஸ் என்னவோ ‘நகரம் மறுபக்கம்’ படத்தில் வரும் வடிவேலுவைப் போன்று ‘ரெண்டு கிளைமேக்ஸா’ என்றே கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறது.  akshay kumar housefull movie two climax

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share