துறைமுகப் பின்னணியில் கமர்ஷியல் கதை!
நாம் இதுவரை கேள்விப்படாத விஷயங்களைத் திரைப்படங்களில் பார்க்கும்போது விழிகள் விரித்து பிரமிப்போம்; என்ன சொல்கிறார்கள் என்று புரியாதபோது கொஞ்சம் தலையைப் பிய்த்துக் கொள்வோம். கொஞ்சம் புரியட்டும் என்று விலாவாரியாக விளக்கினால், ‘ஆனா ஆவன்னா எல்லாம் சொல்லிக் கொடுக்காதீங்க’ என்று விமர்சிக்கவும் செய்வோம். இப்படிப் பன்முனையில் இருந்து எதிர்ப்புகள் வருமென்று தெரிந்தும், புதிய களங்களைத் திரையில் காட்டுவது தொடர்கிறது. தற்போதைய சூழலில், அதுவே கல்லா கட்டுவதற்கான வழியாகவும் திகழ்கிறது.
அந்த வகையில், உலகம் முழுக்கத் துறைமுகங்களில் நிகழும் சரக்கு பரிவர்த்தனையை மையப்படுத்தி ‘அகிலன்’ தந்திருக்கிறார் இயக்குனர் கல்யாண கிருஷ்ணன். அதற்காக வெங்காயம் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள், சீன வெடிகள் வரை எப்படி கடல் வழியாக இறக்குமதியாகி உள்ளூர் சந்தையைக் கபளீகரம் செய்கின்றன என்பதைப் பற்றிப் பாடமெடுக்காமல், ரொம்பவும் எளிதாக சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கடத்தல்களைச் சுற்றியே கதை அமைத்திருக்கிறார். அதுதானே வில்லன், ஹீரோ என்று கதை சுற்றிச் சுழல வழி வகுக்கும்.
கருத்து சொல்வது சரி, கமர்ஷியலாகவும் இருக்கிறதா ‘அகிலன்’?
கடல் வழி கடத்தல்!
கடல் வழியாக நடத்தப்படும் கடத்தல் தான் ‘அகிலன்’ படத்தின் மையம். அதற்காக ஜடாமுடி ஜிம் பாய்ஸ், பிகினி அழகிகள் சூழ, சுள்ளென்று காயும் வெயிலில் கலர்ஃபுல் கோட் சூட்டில் காஸ்ட்லி சுருட்டு புகைத்தவாறு வரும் வில்லனை இதில் எதிர்பார்க்கக் கூடாது. அதே பார்முலாவை கைக்கொண்டாலும், ‘என்னோட பட்ஜெட் கொஞ்சம்கம்மி’ என்று சிம்பிளாக தோன்றும் ‘கபூர்’ எனும் வில்லனில் இருந்தே கதை தொடங்குகிறது.
எந்த நாடானாலும் அங்கிருக்கும் அதிகாரிகளைக் கைக்குள் போட்டுக்கொண்டு, சட்டவிரோதமான செயல்களை நடத்திவரும் நெட்வொர்க்கின் மூளையாக இருப்பவர் கபூர் (தருண் அரோரா). சென்னை துறைமுகத்தை அப்படிக் கையில் வைத்திருக்கிறார் அவரது ஆளான பரந்தாமன் (ஹரீஷ் பேரடி). அந்த பரந்தாமன் செய்ய விரும்பும் கடினமான வேலைகளைச் செய்து முடிப்பவர் தான் அகிலன் (ஜெயம் ரவி). கிரேன் ஆபரேட்டராக இருக்கும் அகிலனை மீறி, சட்டவிரோதமாகப் பொருட்களை கப்பலில் ஏற்ற முடியாது.
அகிலனிடம் விசுவாசம் கிடையாது என்று தெரிந்தபின்னும், தான் சொல்லும் வேலைகளைப் பிசிறின்றி செய்தால் போதும் என்றெண்ணுகிறார் பரந்தாமன்.

துறைமுகம் காவல் நிலையத்தில் பணியாற்றும் எஸ்ஐ மாதவி (பிரியா பவானிசங்கர்) அகிலனின் காதலி. தங்களது காதலை எவருக்கும் தெரியாமல் பொத்திக் காக்கும் இவர்களிருவரும், ஒரு கப்பலை வாங்கும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். அதற்காகப் பெரும்பணம் தேவைப்படுகையில், பரந்தாமனை மீறி நேரடியாக கபூரிடம் கைகோர்க்க விரும்புகிறார் அகிலன். அதேபோல, அவரைச் சந்தித்து வேலையொன்றை எளிதாக முடிக்கிறார். ஆனாலும், கபூர் அகிலனை நம்பத் தயாராக இல்லை.
அதேநேரத்தில், துறைமுகம் வழியாக நிகழும் அத்துமீறல்களைத் தடுக்க போலீஸ் அதிகாரி கோகுல் மேத்தா (சிராக் ஜனி) தலைமையில் ஒரு தனிப்படையும் சுற்றி வருகிறது. அவர்களது முதல் குறியே அகிலன் தான்.
ஒருபக்கம் கபூர், பரந்தாமன் கும்பலின் கொலைவெறியை எதிர்கொள்வதோடு, இன்னொரு பக்கம் தன்னைப் பிடிக்கவரும் மேத்தாவின் கண்ணிகளையும் கடந்தாக வேண்டிய கட்டாயம். அகிலன் அவற்றைத் தாண்டி வந்தாரா இல்லையா என்பது கிளைமேக்ஸில் தெரிய வருகிறது.
வெட்டியெறியப்பட்ட காட்சிகள்!
‘அகிலன்’ எனும் பாத்திரத்தைச் சுற்றியே மொத்தக் கதையும் சுழல்வதால், பெரும்பாலான காட்சிகளில் அவரே வருகிறார். வேறுவிதமாகச் சொல்வதானால், நாயகனின் ஆக்ஷன் காட்சிகளுக்கு வலு சேர்க்கும் காட்சிகள் மட்டுமே படத்தில் இடம்பெற்றுள்ளன எனலாம். அதனால் பிரியா பவானிசங்கர், தான்யா ரவிச்சந்திரன் என்று இரு நாயகிகள் இருந்தும், அவர்களைத் தனித்துவமாகக் காட்டும் காட்சிகள் இல்லை. நாயகனுக்கும் அவர்களுக்குமான பிணைப்பும் கூட தெளிவுறத் திரையில் வெளிப்படவில்லை. இது படத்தொகுப்பாளர் என்.கணேஷ்குமாரின் முடிவா அல்லது இயக்குனர் கல்யாண கிருஷ்ணனே இப்படித்தான் படப்பிடிப்புக்கு முன்னதாகத் திரைக்கதை எழுதினாரா என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். ஆனால், படத்தைப் பார்க்கையில் படத்தொகுப்பாளரால் வெட்டியெறியப்பட்ட காட்சிகள் நிறைய இருக்குமென்ற எண்ணமே வலுப்படுகிறது.

யதார்த்தம் நிரம்பிய கேங்க்ஸ்டர் படமாகத் தெரிந்துவிடக் கூடாது என்று நிறையவே மெனக்கெட்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விவேக் ஆனந்த் சந்தோஷம். அதேநேரத்தில், வழக்கமான கமர்ஷியல் படம் போல ஒவ்வொரு பிரேமிலும் அழகை நிரப்பும் எண்ணமும் அவரிடம் இல்லை. தொடக்க காட்சிகளில் சுமார் இரண்டு நிமிடங்கள் வரை நீளும் ஷாட்களின் வழியே, சென்னை துறைமுகம் எத்தனை பிரமாண்டமானது என்பதைக் கடத்தியிருக்கிறது அவரது கேமிரா பார்வை.
கடலுக்குள் நிகழ்வதாகக் காட்டப்படும் சண்டைக்காட்சியொன்று ‘மிராக்கிள்’ மைக்கேல் குழுவினரின் கடின உழைப்பைக் காட்டுகிறது; அது போன்ற சண்டைக்காட்சிகளுக்கு வெகுவாக உதவியிருக்கிறது ஆர்.கே.விஜய்முருகனின் கலை வடிவமைப்பு.
இந்த படத்தில் பல தொழில்நுட்ப அம்சங்கள் கச்சிதமாக அமைந்தாலும், திரையரங்கில் இருக்கும் ரசிகனை படத்தை விட்டு விலகி எதையும் யோசித்துவிடக் கூடாது என்பதில் அதீதக் கவனம் காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ். ஒவ்வொரு காட்சியும் விறுவிறுப்பை முதுகில் ஏற்றுக்கொள்வதற்கு அவரது பின்னணி இசையே உதவியிருக்கிறது. அதனால், ‘என்ன நிகழ்கிறது’ என்று யோசிப்பதற்குள் முதல் பாதி முடிவடைந்துவிடுகிறது.
’அகிலன்’ ஆகத் தோன்றுவதற்காக, வெயிலில் வாடி வதங்கிய வண்ணத்தில் மேக்கப் இட்டுக்கொண்டிருக்கிறார் ஜெயம் ரவி. அழுது புரண்டு நடிப்பதற்கான எந்த வாய்ப்பும் இல்லாத ஆக்ஷன் நாயகன் வேடமானபோதும், ‘இவர் இந்த கேரக்டருக்கு செட் ஆகலை’ என்று சொல்ல முடியாத அளவுக்குத் திரையில் தோன்றியிருக்கிறார்.
கதாநாயகிகள் போலவே வில்லன்களுக்கும் இதில் பெரிதாக வேலையில்லை. அதுவே படத்தின் பெரிய குறை. இத்தனைக்கும் தருண் அரோரா, ஹரீஷ் பேரடி, ஹரீஷ் உத்தமன் பாத்திரங்களுக்கான அறிமுகம் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனைக் கதையின் நடுவே வளர்த்தெடுக்கத் தவறியிருக்கிறார் இயக்குனர். இறுதியாக வரும் 20 நிமிடக் காட்சிகளில் அந்த தவறு கண்ணை உறுத்துகிறது.
மதுசூதன் ராவ், சிராக் ஜனி, ஐ.எஸ்.ராஜேஷ், சாய் தமிழ், திலீபன் உள்ளிட்டோருக்கு ஓரளவுக்குக் காட்சிகள் கிடைத்தாலும், அப்பாத்திரங்களில் இறுதி நிலை என்னவென்று பார்வையாளர்களுக்கு உணர்த்தப்படுவதில்லை. பிளாஷ்பேக் காட்சியில் வரும் சாய் தீனா, மைம் கோபியின் பாத்திரங்களும் தெளிவுறத் திரையில் காட்டப்படவில்லை.
இதையெல்லாம் தாண்டி ஜெயம் ரவி முழுக்க நல்லவரா அல்லது நல்லதும் கெட்டதும் கலந்த சந்தர்ப்பவாதியா என்பதைத் திரைக்கதையில் தெளிவுபடுத்தாமல் விட்டிருக்கிறார் இயக்குனர். அதனால், எண்பதுகளில் வெளியான ஏதேனும் ஒரு ஆக்ஷன் படத்தையும் அகிலனையும் ஒப்பிட்டால் நிறைய ஒற்றுமைகளைச் சொல்ல முடியும். இதுவே, எதிர்காலத்தில் இந்த படத்தை எளிதாக ‘ஸ்பூஃப்’ செய்யவும் உதவும்.
ஜனநாதனுக்கு மரியாதை!
மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘பேராண்மை’யில் நாயகனாக நடித்தவர் ஜெயம் ரவி. அதன் திரைக்கதையை எழுதியவர் கல்யாண கிருஷ்ணன். தனது குருவுக்கு மரியாதை செய்யும் வகையில், இப்படத்தில் தொழிற்சங்கவாதியாக வரும் மதுசூதன் பாத்திரத்திற்கு ‘ஜனநாதன்’ என்று பெயர் சூட்டியிருக்கிறார் இயக்குனர்.
கிட்டத்தட்ட ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் பாரதிராஜாவைத் திரையில் காட்டும் முன்பாக பாக்யராஜ் ‘பில்டப்’ செய்திருப்பாரே, அப்படி அமைந்திருக்க வேண்டிய காட்சி அது. ஆனால், தனியாகத் துருத்திக் கொண்டு தெரிய வேண்டாம் என்று வெகுசாதாரணமாக அதனைக் காட்டியிருப்பதால், நம்மைப் போலவே வேலை மெனக்கெட்டு யாராவது உற்றுக் கவனித்தால் தான் அது தெரியும்.
ஜனநாதன் படங்களைப் போல கேமிராவை நோக்கிப் புத்திமதிகள் சொல்லும் விஷயம் இதில் இல்லை. அதேநேரத்தில், ஜனநாதன் படங்களான ‘ஈ’, ‘பேராண்மை’யில் பொதுவுடைமைச் சித்தாந்தம் கொண்டு இந்த உலகைப் பார்க்கும் பாத்திரங்கள் இதில் இல்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.

ஜனநாதன் பாத்திரம் அதனைத் தாங்கியிருந்தாலும், திரையில் அவ்விஷயங்கள் வெளிப்படுவதில் பிசகுதல் நிகழ்ந்திருக்கிறது. அதனைச் சரி செய்திருந்தால், துறைமுகம் வழியாக நிகழும் ஏற்றுமதி இறக்குமதியால், அதில் நிகழும் முறைகேடுகளால் அப்பாவிப் பொதுமக்கள் எவ்வாறு பஞ்சத்திலும் பசியாலும் வாடுகின்றனர் என்பதைப் பொட்டிலறைந்தாற் போலச் சொல்லியிருக்க முடியும்.
அது நிகழாத காரணத்தால், துறைமுகப் பின்னணியில் சொல்லப்பட்ட ஒரு ஆக்ஷன் கதை என்றளவில் தன் பயணத்தை முடித்துக் கொண்டிருக்கிறது ‘அகிலன்’.
உதய் பாடகலிங்கம்
டிஜிட்டல் திண்ணை: சலசலப்பு…கசப்பு: ஸ்டாலின் கூட்டிய திடீர் கூட்டணிக் கூட்டம்!
“ஸ்டாலின் உழைப்பிற்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் முதல்வர் பதவி”: ரஜினிகாந்த்
