அஜித்தின் 63-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கப்போகும் நடிகை குறித்த புதிய தகவல், தற்போது வெளியாகியுள்ளது.
அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்து விட்டு அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.
இந்த நிலையில் இப்படத்தில் அஜித் ஜோடியாக பாலிவுட் நடிகை தபு நடிக்க இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடைசியாக கடந்த 2000-ம் ஆண்டில் அஜித் ஜோடியாக ‘கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்’ படத்தில் தபு நடித்திருந்தார்.

சுமார் 24 ஆண்டுகளுக்கு பிறகு அஜித்-தபு இணைந்து நடிக்க இருக்கின்றனர். அதோடு ‘வீரம்’ படத்திற்குப் பின்னர் தேவிஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்க இருப்பதும் கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.
ஏப்ரல் மாதம் ஷூட்டிங் தொடங்கப்படும் என்றும், 2௦25-ம் ஆண்டு பொங்கலுக்கு படம் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இன்று தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஆரம்பம் படத்தின் அஜித் புகைப்படம் மற்றும் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் ஆகியவற்றைப் பகிர்ந்து ,”அர்ப்பணிப்பு, மன வலிமை, தன்னம்பிக்கையின் ராஜா ஏகே சார்.
சிறந்த முன்மாதிரி நீங்கள். வாழ்க்கையின் குறிக்கோள் இதுதான்,” என ட்வீட் செய்து அடுத்த படத்தை இயக்கப்போவது நான் தான் என ஆணித்தரமாக தெரிவித்து இருக்கிறார்.
முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் தான் AK63 படத்தின் இயக்குநர் என, அஜித் மேலாளர் சுரேஷ் சந்திராவும் உறுதி செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
–மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

