“சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன்” : விஜய் காரை மறித்த அஜிதா தர்ணா!

Published On:

| By Kavi

விஜய் காரை மறித்த தவெக பெண் நிர்வாகி தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக பெண் நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தி அடைந்து, பனையூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகைத் தந்தார்.

ADVERTISEMENT

அலுவலகத்துக்கு வெளியே காத்திருந்த அவர், விஜய் காரில் வந்தபோது அந்த காரை மறித்துப் போராட்டத்தில் ஈடுபட்டது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

எனினும் விஜய் காரை நிறுத்தவில்லை. பாதுகாவலர்கள் உதவியுடன் கார் கட்சி அலுவலகத்துக்குள் சென்றுவிட்டது.

ADVERTISEMENT

இந்தசூழலில் தவெக பெண் நிர்வாகி அஜிதாவிடம்  தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ராஜ்மோகன் ஆகியோர் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதைத்தொடர்ந்து நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கட்சி மக்கள் இயக்கமாக இருந்தபோது 500 முதல் 1000 நிர்வாகிகள் வரை ஒரு மாவட்டத்தில் இருந்தனர். ஆனால் அரசியல் கட்சியாக மாற்றும்போது 10 முதல் 12 நிர்வாகிகள் மட்டுமே போட முடியும். இதனால் சிலருக்கு மனவருத்தங்கள் இருப்பது இயல்பு. இது எல்லா கட்சிகளிலேயும் இருக்கும்.

ADVERTISEMENT

உழைத்தவர்கள் யாரையும் விஜய் கைவிட மாட்டார். அதிருப்தியில் இருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களுக்குத் தேவையான பொறுப்புகள் வழங்கப்படும். கடந்த வாரம் அறிவாலயத்தில் ஒரு எம்.எல்.ஏ முதல்வரை சந்திக்கமுடியவில்லை என்று ஐடி கார்டையே கிழித்து தூக்கி எறிந்துவிட்டு போனார்” என்றார்.

திமுகவை விட அதிக ஜனநாயகம் தவெகவில் இருக்கிறது என்று கூறிய நிர்மல் குமாரிடம், பெண் நிர்வாகி அஜிதாவுக்கு நேர்ந்தது போன்ற சம்பவங்கள் குறித்து கேட்கப்பட்டது. இதற்கு அவர், “யார் யாருக்கு என்ன பொறுப்பு கொடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்து தலைமை அவர்களை அழைத்து உரிய முறையில் பேசும்” என்று பதிலளித்தார்.

தற்போது அஜிதா பனையூரில் உள்ள விஜய்யின் கட்சி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். அவரிடம் மீண்டும் நிர்மல் குமார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் அஜிதா ஒப்புக்கொள்ளவில்லை.

“தளபதி வரணும் இங்க.. சாகுற வரைக்கும் இங்கதான் இருப்பேன்” என்று பிடிவாதமாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் தவெக நிர்வாகிகளுக்கும், அஜிதாவுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பனையூர் கட்சி அலுவலக கேட் வாயிலிலேயே தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால், விஜய் அலுவலகத்திலிருந்து வெளியே வர முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share