எந்தவொரு திரை நட்சத்திரத்திற்கும் திருப்புமுனை தந்த படம் என்று ஏதேனும் ஒன்றை மட்டும் குறிப்பிடுவது கடினம். ஏனென்றால், ஒவ்வொரு படமும் படிக்கட்டாய் அமைந்தால் மட்டுமே ஒரு நடிகரால் உச்ச பீடத்தை அடைய முடியும். அந்த வகையில், நடிகர் அஜித்குமாரின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்திய படமென்று ‘பில்லா’வைச் சொல்லலாம்.
ஏற்கனவே பெருவெற்றியைப் பெற்ற ரஜினி படத்தின் ரீமேக் என்பதே, அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அப்போது பெருகியிருந்ததற்குக் காரணம். அதற்கு இணையான தோல்வியைத் தழுவும் வாய்ப்புகளைப் பெற்றிருந்ததே அவர்களது ரசிகர்கள் அதனைக் கொண்டாடத் தூண்டுதலாக இருந்தது.
ஸ்டைலான அஜித்..!
உல்லாசம், வாலி, தீனா, வில்லன் படங்களில் அஜித் ஸ்டைலான தோற்றத்தில் வந்திருந்தாலும், அவரை முழுக்க வேறுவிதமாகக் காட்டிய திரைப்படம் ‘பில்லா’. படம் முழுக்க கோட் சூட் போட்டு பல்வேறு லொகேஷன்களில் நடந்தார் அஜித் என்றும் அப்படம் கிண்டலடிக்கப்பட்டது. ஆனால், அதேவிதமான படமாக்கம் தொடர்ந்து பல படங்களில் இடம்பெற்றதே அந்த உத்திக்குக் கிடைத்த வெற்றி.
இயக்குனர் விஷ்ணுவர்தன், அவரது மனைவியும் ஆடை வடிவமைப்பாளராகப் பில்லாவில் பணியாற்றியவருமான அனு வர்தன், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று பலரும் அதன் பின்னணியில் இருக்கின்றனர். கூலர்ஸ், கோட் சூட், ஜெல் தடவிய அஜித்தின் ஹேர்ஸ்டைல், பைக்கில் தொடங்கி கார், ட்ரக், ஹெலிகாப்டர் என்று பல வாகனங்களின் பின்னணியில் சண்டைக்காட்சிகள் ஆகியன ’பில்லா’வின் தொடர்ச்சியாகப் பல படங்களில் இடம்பிடித்தன.
பின்னிருந்த அபாயம்!
வில்லனாக இருந்து நாயகனாக மாறிய ரஜினிகாந்துக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தந்த படம் ‘பில்லா’. இது 1978ஆம் ஆண்டு அமிதாப்பச்சன் நடிப்பில் இந்தியில் வெளியான படத்தின் ரீமேக். அந்த படத்தை மூலமாகக் கொண்டு, உள்ளடக்கத்தை முற்றிலுமாக மாற்றி ஷாரூக் கானின் ‘டான்’ படத்தை இயக்கியிருந்தார் இயக்குனர் ஃபர்ஹான் அக்தர். அதில் ஷாரூக்கை ஒரு சர்வதேச டான் ஆக ‘ஸ்டைலிஷ்’ ஆகக் காட்டியிருந்தார். டைட்டில் வடிவமைப்பு முதல் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, இசை, படத்தொகுப்பு, கதாபாத்திரங்களின் ஸ்டைலான தோற்றம் என்று பலவற்றில் அந்தப் படம் வித்தியாசப்பட்டிருந்தது. அதேநேரத்தில் அமிதாப் படத்தின் கதையில் இருந்து முற்றிலுமாக வேறுபட்டிருந்தது.
தமிழில் ‘பில்லா’வை ரீமேக் செய்தபோது இம்மூன்று படங்களிலும் சிற்சில விஷயங்களை எடுத்துக்கொண்டது விஷ்ணுவர்தன் குழு. ரஜினியைப் போல அப்பட்டமாக நடித்தால் அவரது ரசிகர்கள் நிச்சயம் புறந்தள்ளிவிடுவார்கள். ஷாரூக் படத்தைப் பின்பற்றினால், பில்லா பாத்திரமே ‘நெகட்டிவ்’மயமாகிவிடும். அந்தச் சூழலில், ஒரு நாயகன் அவ்வாறு நடிப்பது ‘ரிஸ்க்’ ஆகக் கருதப்பட்டது. அதேநேரத்தில், ஒரிஜினல் இருந்த மொத்தக் கதையும் அப்படியே இடம்பெற்றால் சுவாரஸ்யம் போய்விடும்.
ஆதலால், முந்தைய ‘பில்லா’வில் இடம்பெற்ற தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தை முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டு அஜித் ரீமேக் உருவாக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் படத்தின் நீளம் குறைய இது வழிவகுத்ததோடு, ரசிகர்களின் கவனம் முழுக்க அஜித் பாத்திரம் மீதே நிலைக்கக் காரணமானது.
இறுதியாக அமிதாப்பைப் போல மையப் பாத்திரத்தின் நடிப்பு, ரஜினி படத்தில் இடம்பெற்ற அதே கதையமைப்பு, ஷாரூக் கான் படத்தில் இருந்த ஸ்டைலான காட்சியாக்கம் மூன்றையும் தன்னகத்தே அடக்கியது இந்த ‘பில்லா’. படம் வெளியானபோது, அதீத ஆர்வத்தோடும் வெறுப்போடும் கூடியிருந்த பலதரப்பட்ட ரசிகர்களை ஒருசேர ஆச்சர்யப்படுத்தியது.
காத்திருந்த வெற்றி!
‘அறிந்தும் அறியாமலும்’, ‘பட்டியல்’ படங்களின் மூலமாக இளைய தலைமுறை ரசிகர்களை ஈர்த்திருந்தார் இயக்குனர் விஷ்ணுவர்தன். அதற்கும் முன்னதாக ‘குறும்பு’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். அந்த படங்களில் அவரோடு பணியாற்றிய ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பலர் பில்லாவிலும் பணியாற்றினர். அதேநேரத்தில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் அம்சங்கள் இதில் இருந்தன.
நாயகியாகப் பல நடிகைகளைப் பரிசீலித்து, இறுதியாக ஸ்ரீப்ரியா ஏற்ற பாத்திரத்தில் நயன்தாரா நடித்தார். அதேநேரத்தில் நமீதாவின் பாத்திரத்தை ஏற்க எவரும் தயாராக இல்லை. இது போதாதென்று தொடக்கத்தில் வரும் பாடலில் நடிகை ஹேசல் கீச் இடம்பெற்றார். இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் இன்னாள் மனைவி ஆவார்.
இவர்கள் தவிர்த்து சந்தானம், பிரபு, ரஹ்மான், ஆதித்யா, யோக் ஜேப்பி உட்படப் பலர் இதிலுண்டு. இவர்களது இருப்பு இதனை வழக்கமான படமாகக் கருத அனுமதிக்கவில்லை.
பெரிதாகக் கொண்டாடப்பட்ட பாடல்களைத் தாண்டி, ‘பில்லா.. பில்லா..’ என்றொலிக்கும் யுவனின் ‘தீம்’ இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. மொபைல் ரிங்டோன் தொடங்கி கார் போன்ற வாகனங்களில் பயன்படுத்தப்பட்டது வரை அது பல இடங்களில் நெடுங்காலம் வியாபித்திருந்தது.
கருப்பு, நீலம், சாம்பல் மற்றும் வெள்ளை வண்ணங்கள் அதிகம் இடம்பெறும் வண்ணம் அமைந்த நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு ஒட்டுமொத்தப் படத்திற்கும் வேறொரு ‘உரு’ தந்தது. இது போன்ற பல அம்சங்கள் ஒன்றிணைந்து, மிகப்பெரும் காத்திருப்புக்குப் பெரிய வெற்றியை அஜித் ரசிகர்களுக்குத் தந்தது.
ரஜினியின் ஆதரவு!
‘படையப்பா’ கதை விவாதத்தின்போது ’வரலாறு’ படத்தின் கதையை ரஜினி கேட்டார் என்றும், அது அவருக்குப் பிடித்துப்போனது என்றும் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டியொன்றில் குறிப்பிட்டிருந்தார். ஏதேதோ காரணங்களால் ரஜினி அதனை மறந்துவிட, அஜித் நடிப்பில் அதனை உருவாக்கினார் ரவிக்குமார். அந்த படத்தைப் பார்த்தபிறகே, அதனை ‘மிஸ்’ செய்ததாக வருத்தப்பட்டிருக்கிறார். அதேநேரத்தில், அஜித்தைக் கூப்பிட்டழைத்துப் பாராட்டியிருக்கிறார்.
அப்போது, ரஜினியின் பில்லா மற்றும் கமலின் சகலகலா வல்லவன் படங்களை ‘ரீமேக்’ செய்யும் ஆசையில் இருந்தார் அஜித். கே.பாலச்சந்தரின் ‘நான் அவனில்லை’ படத்தை மீண்டும் ஜீவனைக் கொண்டு ‘ரீமேக்’ செய்தார் இயக்குனர் செல்வா. இந்தியில் ஷாரூக்கின் ‘டான்’ பெரிய வெற்றியை ஈட் டியது. இதெல்லாம் ஒன்றுசேர்ந்து, ‘பில்லா’வை ரீமேக் செய்யும் எண்ணத்தை ரஜினியிடம் அஜித் தெரிவிக்க வழிகாட்டியது.
முழுப்படத்தைப் பார்த்தபிறகும் அஜித்தை ரஜினி பாராட்டியது செய்திகளில் இடம்பெற்றது. அப்போது, தன்னுடைய ஸ்டைலோ, நடிப்பின் சாயலோ இல்லாமல் பில்லா படத்தில் அஜித் நடித்ததை அவர் சிலாகித்தார் என்றும் சொல்லப்பட்டது. அப்போது இருவர் இடையே பூத்த நட்பு இப்போதும் தொடர்ந்து வருகிறது.
‘பில்லா’வில் டேவிட் பில்லாவாக வரும் அஜித்தை ரசித்துக் கொண்டாடினர் ரசிகர்கள். அதுவே அஜித் ‘மங்காத்தா’வில் விநாயக் மகாதேவன் பாத்திரத்தில் நடிக்கவும் காரணமானது.
16 ஆண்டுகள்!
அஜித்தின் ‘பில்லா’ வெளியாகி இன்றோடு (டிசம்பர் 18) 16 ஆண்டுகள் ஆகிறது. இயக்குனர் விஷ்ணுவர்தனோடு அஜித் இரண்டாவதாக இணைந்து ‘ஆரம்பம்’ தந்தார். அது கிட்டத்தட்ட 2007 மும்பை தாக்குதலை ஒட்டி அமைந்திருந்தது. அதன்பிறகு இருவரும் இணையவே இல்லை.
ஒரு வெற்றிகரமான கமர்ஷியல் படம் என்பது அந்த காலகட்டத்தில் மட்டும் ரசிக்கப்படுவது போதாது. காலம் தாண்டியும் மக்கள் அதனைக் கொண்டாட வேண்டும். அந்த வரிசையில் வெகுசில படங்கள் மட்டுமே இடம்பெறும். அஜித் நடிக்கும் படங்கள் அந்தப் பட்டியலில் இடம்பிடிக்க வேண்டுமென்பதே அவரது ரசிகர்களின் ஆசை.
அதற்கு வெறுமனே சிறப்பான காட்சியாக்கம் மட்டுமல்லாமல் உயிர்ப்பான கதையமைப்பும் இருந்தாக வேண்டும். அவ்வாறு இல்லாமல் போன அஜித்தின் படங்கள் கூட ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. ஒருவேளை சிறந்த கதையோடும் காட்சியமைப்போடும் அவரது படங்கள் வெளியானால் இன்னும் பெரிய உயரத்தை எட்டக் கூடும். அதனை உணர்த்தும் வகையில் அஜித் ரசிகர்களின் நினைவுகளில் தொடர்ந்து அலையடித்து வருகிறது ‘பில்லா’வின் பெருவெற்றி!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உதய் பாடகலிங்கம்
“மக்கள் வரலனாலும் வெளியேத்துங்க” : தூத்துக்குடி கலெக்டரின் அவசரக் குரல்!
”இந்த அளவிற்கு மேல் பெய்தாலே ரெட் அலர்ட் தான்”: தலைமை செயலாளருக்கு பாலச்சந்திரன் பதில்!