மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் ஷிண்டே தலைமையிலான ஆட்சியில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான அஜித் பவார் துணை முதலமைச்சராக இன்று (ஜூலை 2) பதவியேற்றுக்கொண்டார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இந்தசூழலில் கடந்த 2022-ஆம் ஆண்டு சிவசேனா கட்சியிலிருந்து ஏக்னாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவளித்தார். இதனால் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி கவிழ்ந்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சராகவும், பாஜகவின் தேவந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும் அக்கட்சியின் தலைவர் சரத்பவாரின் சகோதரர் மகனுமான அஜித் பவார் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 30 பேருடன் அஜித் பவார் இன்று ஆளுநர் மாளிகை சென்றார்.
அங்கு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் 8 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவியேற்றுக்கொண்டது மகாராஷ்டிரா மாநில அரசியலில் மிக முக்கியமான விவாதமாகியுள்ளது.
செல்வம்
தென்காசி கைதி மரணம் – வீடியோவை டெலிட் செய்த போலீஸ் : என்ன நடந்தது?
