டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி அறிவிக்கப்பட்டனர்.
ரோகித் சர்மா தலைமையிலான அணியில் ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் ஃபண்ட், சஞ்சு சாம்சன், பாண்ட்யா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், சஹால், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 வீரர்களும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் உள்ளிட்ட வீரர்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது.
டி20 உலக கோப்பை போட்டியில் ரிங்கு சிங், கே.எல்.ராகுல், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற வீரர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர்களது ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இந்தநிலையில், டெல்லியில் இன்று (மே 2) ரோகித் சர்மா, டி20 உலக கோப்பை தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய ரோகித் ஷர்மா, “கேப்டன் பதவி ஒன்றும் எனக்கு புதிதல்ல. முன்னதாக பல கேப்டன்களின் கீழ் விளையாடியிருக்கிறேன். ஒரு வீரராக அணிக்கு தேவையானதை செய்ய எப்போதும் நான் முயற்சி செய்து வருகிறேன்.
உலக கோப்பை போட்டி என்பதால் நாங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். அமெரிக்காவில் ஆடுகளம் எப்படி இருக்கும் என்று கணிக்கமுடியவில்லை. எதிரணியில் விளையாடக்கூடிய வீரர்களையும் நாம் உற்று நோக்க வேண்டும்.
மிடில் ஆர்டர் பேட்டிங் குறித்து மிகுந்த கவனத்துடன் இருக்கிறோம், டாப் ஆர்டர் பேட்டிங் நன்றாக இருக்கிறது. அதில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்காது. ஷிவம் துபே மிடில் ஆர்டரில் மிகவும் சிறப்பாக ஆடி வருகிறார், இருந்தாலும் போட்டி நடைபெறும் போது எதிரணியின் செயல்பாடு, பயிற்சி போன்றவற்றின் அடிப்படையில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை களமிறக்குவோம்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அஜித் அகர்கர் ரிங்கு சிங்குவை அணியில் சேர்க்க முடியாதது ஒரு கடினமான முடிவு என்று தெரிவித்துள்ளார்.
அஜித் அகர்கர் கூறும்போது, “ஐபிஎல் போட்டிகளில் கே.எல்.ராகுல் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக ஆடி வருகிறார். டி20 உலக கோப்பை போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு தான் நாங்கள் மிகவும் முக்கியத்துவம் கொடுத்து செலக்ட் செய்தோம். அதனால் சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் இருவரும் அதற்கு பொருத்தமாக இருப்பார்கள் என்று எண்ணினோம். சஞ்சு சாம்சன் எந்த ஆர்டரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
அதேபோல, ரிங்கு சிங் அணியில் இடம்பெறாதது அவரது தவறில்லை, அவரை 15 வீரர்களுக்குள் இடம்பெற வைக்கமுடியவில்லை, அவரை அணியில் சேர்க்காதது கடினமான ஒரு முடிவாகவே இருந்தது. அதனால் அவரை மாற்று வீரராக அறிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாடு பறந்தது எப்படி? வெளியுறவுத்துறை புது விளக்கம்!
திருவிழா நடத்துவது யார்? தீவட்டிப்பட்டியில் பற்றி எரியும் தீ!