மணிரத்னத்தை தொடர்ந்து மற்றுமொரு பொன்னியின் செல்வன்

Published On:

| By Balaji

எம்.ஜி.ஆரின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன், அஜய் பிரதீப் இயக்கத்தில் திரைப்படமாகவும் வெப் தொடராகவும் உருவாக உள்ளது. இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் பிறந்தநாளான இன்று (ஜனவரி 17) அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்.ஜி.ஆர் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்தபோது கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக தயாரிக்க விரும்பினார். அவரது விருப்பம் கடைசிவரை நிறைவேறவில்லை.

ADVERTISEMENT

பொன்னியின் செல்வன் நாவல் நாட்டுடைமையாக்கப்பட்ட பின்னர் பலரும் அதனை திரைப்படமாக்க, தொலைக்காட்சி தொடராக தயாரிக்க முயற்சி செய்தனர். ஆனால் எவராலும் அதனை செய்ய முடியவில்லை. இயக்குநர் மணிரத்னம் முதல் பிரதி அடிப்படையில் லைகா நிறுவனத்திற்காக இயக்கி தயாரித்திருக்கிறார்.

இதன் முதல்பாகம் 2022 ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘ஜெனோவா’ படத்தில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடித்த ஓமனாவின் மகன் அஜய் பிரதீப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் எட்டர்னிட்டி ஸ்டார் மற்றும் எட்டர்னிட்டி மோஷன் கிராஃப்ட் ஹப் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் உதவியுடன் ஸ்ரீநிதி அஜய் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாக அவரே கூறியுள்ளார்.

ADVERTISEMENT

பல்வேறு மொழிகளை சேர்ந்த முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ள பொன்னியின் செல்வன் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளதாகவும்,வெப்சீரிஸ் 12 சீசன்களில் 153 எபிசோட்களைக் கொண்டிருக்கும் என்றும், இரண்டு வருடங்களில் மூன்று பாகங்களாக இப்படம் வெளியிடப்படும் என்கிறார் இயக்குனர் அஜய் பிரதீப்.

ADVERTISEMENT

படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க, சாபு சிரில் கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஆண்டனி செய்யவுள்ளார். பாகுபலி புகழ் விஸ்வநாத் சுந்தரம் மற்றும் சண்முகவேல் ஆகியோர் ஓவிய சித்திரங்களை வடிவமைக்க உள்ளனர் எனவும் கூறியுள்ளார்.

“எம்.ஜி.ஆருக்கு சமர்ப்பணம் செய்யும் விதமாக, மூன்று போஸ்டர்கள் வெளியிடப்படுகின்றன. எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய லட்சிய கதாபாத்திரங்களான அருள்மொழிவர்மன் மற்றும் வந்தியத்தேவன் வேடங்களில் இந்த போஸ்டர்களில் அவர் இடம் பெற்றுள்ளார். தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற எழுத்தாளரான டாக்டர் கலைஞர் கருணாநிதிக்கு இந்த பிரம்மாண்ட படைப்பு அர்ப்பணிக்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் இரு பெரும் ஆளுமைகளான எம்ஜிஆர் மற்றும் கலைஞரை இயக்குநர் அஜய் பிரதீப் தனது மானசீக குருவாக நினைப்பதால் இந்தப் படைப்பை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.

எம்.ஜி,ஆர் உடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

**-இராமானுஜம்**


செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share