மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாரதிய ஜனதா கட்சி இந்தியாவில் வாழும் சிறுபான்மை மதத்தவர்களுக்கு எதிராக குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான சட்டங்களையும், நடவடிக்கைகளையும் மேற்கொண்டுவருவதாக எதிர்கட்சிகளால் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் வேலைக்கு செல்லும் இஸ்லாமிய பெண் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மையமாக கொண்ட “ஃபர்ஹானா” திரைப்படத்தை தயாரித்துள்ளது டிரீம் வாரியர் பிக்சர்ஸ்.
இந்திய அரசியலையும், ஆட்சியாளர்களையும் கடுமையாக விமர்சனம் செய்த சகுனி படத்தை தயாரித்த டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சமகால சமூக அரசியலை பிரதிபலிக்கும் திரைக்கதையுடன் கூடிய படமாக” ஃபர்ஹானா” இருக்கும் என்பதை அப்படத்தின் முன்னோட்டம் உணர்த்துகிறது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘ஃபர்ஹானா’ திரைப்படம் வரும் மே 12-ம் தேதி திரைக்கு வர உள்ளது.
அதனை முன்னிட்டு அந்தப் படத்தின் முன்னோட்டத்தை படத்தை தயாரித்துள்ள ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நேற்று (ஏப்ரல் 22) மாலை வெளியிட்டுள்ளது.
நெல்சன் வெங்கடேசன் இந்தப் படத்தை எழுதி, இயக்கியுள்ளார். ஜஸ்டின் பிரபாகரன் இசை அமைத்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் செல்வராகவன், ஐஸ்வர்யா தத்தா, ஜித்தன் ரமேஷ், அனுமோல் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
‘எந்தப் பறவையும் பறக்க மாட்டேன்னு கூட்டுல இருக்குறது இல்ல’ என்கிற ஒற்றை வசனம் இஸ்லாமிய பெண்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண் சுதந்திரம் குறித்து அழுத்தமாக பேசுவதாகவே இருக்கிறது.
வணிகரீதியான மசாலா படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் அவ்வப்போது வணிக நோக்கத்துக்கு அப்பாற்பட்டு இது போன்ற சமூக சார்ந்த படங்களை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இராமானுஜம்
