டூப் போடாமல் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

Published On:

| By admin

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் ‘டிரைவர் ஜமுனா’ படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது.
வத்திக்குச்சி படத்தை இயக்கிய இயக்குநர் பா.கின்ஸ்லின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘டிரைவர் ஜமுனா’. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இவருடன் ‘ஆடுகளம்’, நரேன், ஸ்ரீ ரஞ்சனி, ‘ஸ்டான்ட் அப் காமெடியன்’ அபிஷேக், ‘ராஜா ராணி’ படப் புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஜிப்ரன் இசையமைத்திருக்கிறார். டான் பாலா கலை இயக்கத்தை கவனிக்க, படத்தொகுப்பை ஆர். ராமர் மேற்கொண்டிருக்கிறார். சாலை பயணத்தை மையப்படுத்திய இந்தத் திரைப்படத்துக்கு ஒலியின் பங்களிப்பு இன்றியமையாதது என்பதால், படத்தின் ஒலி வடிவமைப்பை, முன்னணி ஒலி வடிவமைப்பு நிறுவனமான ஸிங்க் சினிமா ஏற்றுக்கொண்டிருக்கிறது. இந்தத் திரைப்படத்தை 18 ரீல்ஸ் சார்பில், பிரபல குழந்தைகள்நல மருத்துவரும், முன்னணி திரைப்பட தயாரிப்பாளருமான எஸ்.பி.சௌத்ரி தயாரித்திருக்கிறார்.

படத்தைப் பற்றி இயக்குநர் கூறுகையில், “இன்றைய சூழலில் ஏராளமான பெண்களும் கால் டாக்ஸி, ஆட்டோ டிரைவர்களாகப் பணியாற்றுகிறார்கள். பெண் டிரைவரின் ஒருநாள், ஒரு டிரிப்பை மையப்படுத்திய திரைக்கதை தான் ‘டிரைவர் ஜமுனா’. பொதுவாக சாலை பயணம் பற்றிய திரைப்படம் என்றால் ப்ளூமேட் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படத்தை உருவாக்குவார்கள். ஆனால் இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் டூப் போடாமல், அவரே வாகனத்தை இயக்கிக்கொண்டே, தனக்கான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார். சாலையைக் கவனித்துக்கொண்டு, உடன் நடிக்கும் நடிகர்களின் உரையாடலுக்கும் பதிலளித்துக்கொண்டே அவர் நடித்தது படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தியது” என்றார்

**-இராமானுஜம்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share