நடிகர் அர்ஜுன் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடப் படவுலகிலும் தனக்கென்று ‘தனித்துவமான’ மதிப்பைக் கொண்டவர். மலையாளம், இந்திப் படங்களிலும் கூட இவர் நடித்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் ‘ஆக்ஷன் கிங்’ என்ற அடைமொழியைக் கொண்டு பல மாநில ரசிகர்களுக்கும் தெரிந்தவராக விளங்குகிறார். அவரது வாரிசு என்ற அடையாளத்தோடு திரையுலகில் நுழைந்த மகள் ஐஸ்வர்யா, விஷால் ஜோடியாக ‘பட்டத்து யானை’யில் அறிமுகம் ஆனார். Aishwarya Arjun returns big screen after marriage!
ஐந்தாண்டுகள் கழித்து, அர்ஜுன் இயக்கிய ‘பிரேம பர்ஹா’ எனும் கன்னடப்படத்தில் நாயகியாக நடித்தார். இது ‘சொல்லிவிடவா’ என்ற பெயரில் தமிழிலும் வெளியானது.
அதனைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு படத்தில் அர்ஜுன் இயக்கத்தில் அவர் நாயகியாக நடிக்கப் போவதாகச் சில ஆண்டுகளாகவே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. இப்படம் தெலுங்கில் தயாராவதாகச் சொல்லப்பட்டது.
முதலில் இதில் விஸ்வக் சென் நடிப்பதாகச் சொல்லப்பட்டது. படப்பிடிப்பு திட்டமிட்டபிறகு அவர் அந்த புராஜக்டில் இருந்து வெளியேறிவிட்டதாகச் செய்திகள் வந்தன.
பிறகு, உமாபதி ராமையாவைத் திருமணம் செய்தார் ஐஸ்வர்யா. அந்த நேரத்திலேயே, ஐஸ்வர்யா ஒரு படத்தில் நாயகியாக நடித்து வருவதாகவும் தகவல்கள் வந்தன.
அந்த படத்தின் பெயர் ‘சீதா பயணம்’. இதன் டீசர் இப்போது வெளியாகியிருக்கிறது.
நிரஞ்சன் இப்படத்தில் ஐஸ்வர்யாவின் ஜோடியாக நடித்திருக்கிறார். அனூப் ரூபன்ஸ் இசையமைத்திருக்கிறார்.
சத்யராஜ், பிரகாஷ்ராஜ், கோவை சரளா உட்படப் பலர் நடித்திருக்கிற இப்படத்தில் அர்ஜுனும் ஒரு பாத்திரத்தில் தலைகாட்டியிருக்கிறாராம்.
முந்தைய படங்களைப் போல இல்லாமல், இப்படத்தில் காதல் நாயகி எனும் அந்தஸ்துக்குப் பொருந்துகிற வகையில் தோன்றியிருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன்.
நிச்சயமாக, இப்படம் தமிழிலும் ‘டப்’ செய்யப்பட்டு வெளியாகும் என்று நம்பலாம். அதனை முன்னெடுக்கிற வகையில் சில நிகழ்ச்சிகளும் நிகழும்.
அப்போது, பத்தாண்டுகளுக்குப் பின்னும் நாயகியாகத் தொடர்கிற அனுபவங்களை ஐஸ்வர்யா நிச்சயம் பகிர்ந்து கொள்வார் என்று நம்பலாம்..!