மதுரை விமான நிலையம், மதுரை மத்திய சிறை, திருச்சி மத்திய சிறை, சென்னை புழல் சிறைக்கு நேற்று (டிசம்பர் 14) வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் குழு, எல்லைகளுக்கு உட்பட்ட காவல் நிலைய போலீசார், உயரதிகாரிகள், மோப்ப நாயுடன் சென்று இன்ஞ் பை இன்ஞ்-ஆக அனைத்து இடங்களையும் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை சல்லடையிட்டு ஆய்வு செய்தனர். இறுதியில் இது புரளி என்பது தெரியவந்தது.
சென்னை, மதுரை, திருச்சி ஆகிய காவல்துறை கண்ட்ரோல் ரூமுக்கு வந்த அழைப்பு எண் ஒரே எண்ணாக இருந்தது.
உடனடியாக இந்த கைப்பேசி எண் எங்கிருந்து வந்தது? யார் இவர்? என்று சைபர் கிரைம், க்யூ பிரிவு மற்றும் உளவுத்துறை போலீசார் ஒன்றிணைந்து கால் டீட்டெய்ல்ஸ் மற்றும் லொக்கேஷனை ஆய்வு செய்தபோது மதுரை கரியமேடு பகுதியை காட்டியுள்ளது.
அதன்பிறகு அவர் மதுரை கரியமேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பதுங்கியிருப்பதைக் கண்டுபிடித்து இன்று காலை 10.30 மணியளவில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில், விருதுநகர் திருச்சுழி அருகில் பூத்தைய நந்தன் கிராமத்தைச் சேர்ந்த தடியன் மகன் தங்கம் என்பதை உறுதி செய்தனர். மேலும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் போதைக்கு அடிமையானவர் என்பதும் தெரியவந்தது.

எதற்காக சிறைகளுக்கும் விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தீர்கள் என்று போலீசார் கேட்டுள்ளனர்.
அதற்கு, “போதையில் தெரியாமல் போன் செய்துவிட்டேன். போலீசார் கண்டுபிடிக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். விபரீதம் தெரியாமல் விளையாட்டாக செய்துவிட்டேன்” என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார் தங்கம்.
இருப்பினும் இவரது பின்னணியில் யாராவது இருக்கிறார்களா என்று புலனாய்வு அமைப்புகள் விசாரித்து வருகின்றனர்.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் ஹேமா: வறட்சியைத் தடுக்கும் பானங்கள்!
அதிமுக பொதுக்குழு கூட்டம்… நல்ல நேரத்திற்காக காத்திருந்த எடப்பாடி