இந்திய விமானப் படையின் வான் சாகச நிகழ்வை பார்ப்பதற்காக லட்சக்கணக்கான மக்கள் சென்னை மெரினா கடற்கரைக்கு வந்ததால், சென்னை நகரம் முழுவதும் இன்று (அக்டோபர் 6) கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது.
இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் முடிவடைந்து 93-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்காக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மாநிலங்களில் இருந்து அதிகளவில் பொதுமக்கள் குடும்பத்துடன் மெரினா நோக்கி படையெடுத்தனர். இதனால் புறநகர் மின்சார ரயில்கள், மெட்ரோ ரயில்களில் கூட்டம் அலைமோதியது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் காரணமாக, ஒரு மெட்ரோ ரயில் சென்ற பிறகு தான் பயணிகள் ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். மெட்ரோவில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலரும் காத்திருந்து அடுத்தடுத்த ரயில்களில் பயணம் செய்தனர்.
குறிப்பாக ஓமந்தூரார் மெட்ரோ ரயில் நிலையத்தில் மக்கள் அதிகளவில் குவிந்தனர். எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே தென்பட்டது. பயணிகளை ஒருங்கிணைப்பு செய்ய முறையான நடவடிக்கை எடுக்காததால், படிக்கட்டுகளில் ஏறும்போது கடும் கூட்ட நெரிசலில் மக்கள் சிக்கி தவித்தனர். கூஆர் கோர்டு செக் செய்யும் இடத்தில் கூட்ட நெரிசலால் கார்டு மற்றும் கூஆர் கோர்டை காண்பித்தாலே மக்கள் அனுப்பப்பட்டனர்.
கிண்டி மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் செய்ய இடமில்லாததால், பலரும் ஓமந்தூரார் எஸ்டேட் நோக்கி பைக்கில் பயணித்தனர். கிண்டியில் இருந்து ஓமந்தூரார் வருவதற்கு மூன்று மணி நேரத்திற்கும் மேல் ஆனது. மேலும், வாலாஜா சாலையில் கூட்ட நெரிசல் காரணமாக, மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பைக்கை நிறுத்திவிட்டு மெரினாவுக்கு சென்றனர்.
வாலாஜா சாலையில் கையில் குடைகள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை கையில் ஏந்தியபடி குடும்பத்துடன் அணிவகுத்த மக்கள், மெரினா சென்றடைந்து உற்சாகமாக வான் சாகச நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். கடும் வெப்பத்தால் மயக்கமடைந்த பொதுமக்கள் சிலருக்கு அங்கேயே மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு மணிக்கு பிறகு மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் கடும் கூட்ட நெரிசலில் சிக்கித்தவித்தனர். திருவல்லிக்கேணியின் பல பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
திருவல்லிக்கேணி பாரதி சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்கிக்கொண்டது. துரிதமாக போராடி போலீசார் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். சென்னை மாநகரம் முழுவதும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மெரினாவில் சிலிர்க்க வைத்த விமான சாகச நிகழ்ச்சி…. கண்கவர் புகைப்பட தொகுப்பு இதோ!