மெரினா கடற்கரையில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
வரும் அக்டோபர் 6ஆம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படை தினத்தை முன்னிட்டு, போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை பார்த்து ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது நாளாக இன்று (அக்டோபர் 4) மெரினாவில் ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விமானப் படையின் ஆகாஷ் கங்கா அணி, வானில் குட்டிக்கரணம் அடித்ததும், சூர்யகிரண் ஏரோபாட்டிக் அணி ஸ்கை டைவிங் அடித்ததும், சாரங் ஹெலிகாப்டர்களின் வான் நடனமும் பார்வையாளர்களை கவர்ந்தது.
எம்ஐ-70 ஹெலிகாப்டரில் காமாண்டோ வீரர்கள் வானில் இருந்து குதித்து தீவிரவாதிகளிடம் சிக்கிய பிணைக் கைதிகளை மீட்பது போன்ற காட்சிகளை செய்து காட்டி அசத்தினர்.
நாளை மறுநாள் சாசக நிகழ்ச்சி நடைபெறவிருக்கும் நிலையில் சென்னை போக்குவரத்து கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், “விமானப்படை சாகச நிகழ்வுகளை காண வரும் பொதுமக்களின் நலன் கருதி, மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக காலை 8:00 மணி முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து அண்ணா சதுக்கத்திற்கு வழக்கமாக இயக்கப்படும் 120 பேருந்துகளுடன் கூடுதலாக 75 பேருந்துகளும்,
அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையங்களில் இருந்து 25 சிற்றுந்துகளும் (Small Bus) இயக்கப்பட உள்ளது.
அரசினர் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து சென்னை பல்கலைக்கழகம் வரை 3 நிமிட இடைவெளியில் சிற்றுந்துகளும்,
டி.எம்.எஸ் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள வி.எம்.தெரு வரை 2 நிமிட இடைவெளியில் மொத்தம் 25 சிற்றுந்துகள் இயக்கப்பட உள்ளன.
முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தினை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
விஜய் சேதுபதிக்கு பிக் பாஸ் வைத்த செக்!
யூடியூப் கிரியேட்டர்ஸ்களுக்கு குட் நியூஸ்: இனிமேல் ஷார்ட்ஸ் வீடியோ 3 நிமிஷம்!