பெங்களூருவில் ஏர் டாக்ஸி அறிமுகப்படுத்துவதற்காக சர்லா ஏவியேஷன் நிறுவனமும் பெங்களூருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையமும் ஒப்பந்தம் செய்துள்ளன.
இந்தியாவில் மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாகன நெரிசல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகின்றன.
அந்த வகையில், பெங்களூருவில் எப்போதும் அதிகளவில் வாகன நெரிசல் இருக்கும். அதிலும் வாகன நெரிசல் மிகவும் அதிகமானால், நடைப்பாதை மீதெல்லாம் இரண்டு சக்கர வாகனங்கள் செல்வதை நாம் பார்க்க முடியும்.
இந்த நிலையில்தான் பெங்களுருவை சேர்ந்த சர்லா ஏவியேஷன்(Sarla Aviation) என்கிற நிறுவனம் ஏர் டாக்ஸியை(Air Taxi) அறிமுகம் செய்வதற்காக பெங்களுருவின் கெம்பகௌடா சர்வதேச விமான நிலையத்துடன் இந்த வாரம் ஒப்பந்தம் செய்துள்ளது.
குறிப்பாக eVTOL(electric vertical take-off and landing) என்கிற செங்குத்தாக புறப்படவும், தரையிறங்கக்கூடிய எலக்ட்ரிக் ஏர் டாக்ஸியை சர்லா நிறுவனம் அறிமுகப் படுத்தவுள்ளது.
இந்த ஏர் டாக்ஸியில் ஓட்டுனரையும் (பைலட்) சேர்த்து மொத்தம் 7 இருக்கைகள் உள்ளன. 7 மோட்டார் கொண்ட இந்த டாக்ஸி ஒரே சார்ஜில் ஏறத்தாழ 160 கி.மீ தூரம் வரை செல்லும். மேலும், அதிகபட்சமாக 250 கி.மீ வேகத்தில் இந்த ஏர் டாக்ஸியினால் செல்லமுடியும் என்று சர்லா ஏவியேஷனின் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக பெங்களூரு விமான நிலையம் – எலக்ட்ரானிக் சிட்டி இடையே இந்த ஏர் டாக்ஸி சேவை வழங்கப்படவிருக்கிறது.
பெங்களூரு விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக் சிட்டிக்கு சாலை வழியாக சென்றால் ஏறத்தாழ இரண்டரை மணி நேரம் ஆகும். இதுவே ஏர் டாக்ஸி மூலமாக சென்றால் 20 நிமிடங்கள்தான் ஆகும் என்றும், இதற்கான கட்டணம் ரூ.1,700 என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால். இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று சர்லா ஏவியேஷன் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பெங்களூருவை விட சென்னைக்கு இந்த ஏர் டாக்ஸி சேவை தேவை என்பதை இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ஆயுத பூஜை உணர்த்தியது. இந்த ஆண்டு ஆயுத பூஜைக்கு சில தினங்களுக்கு முன்பு சென்னையிலிருந்து கோவை, மதுரை, திருச்சி போன்ற நகரங்களுக்கான விமான டிக்கெட்கள், சாதாரண நாட்களை விட ஏறத்தாழ 3 மடங்கு உயர்ந்தது.
இந்த சூழலில் ஏர் டாக்ஸிகள் சென்னையிலும் அறிமுகப்படுத்தப்பட்டால், பயனுள்ளதாக இருக்கும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
உளுந்து விதைகளில் கலப்படம்… விவசாயிகள் புகார்! நடவடிக்கை எடுப்பாரா எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்?
ஆசிரியர் பணி நியமனங்களை நிறுத்தி வைத்திருப்பது ஏன்? – அன்புமணி கேள்வி!
முன்னாள் ‘ரா’ ஏஜெண்ட் விகாஷ் யாதவை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதில் சிக்கல்!