கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 5 எம்.பிக்கள் உள்ளிட்ட 150 பயணிகளுடன் டெல்லி சென்ற ஏர் இந்தியா விமானத்தில் நடுவானில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது.
திருவனந்தபுரத்தில் இருந்து நேற்று இரவு (ஆகஸ்ட் 10) டெல்லிக்கு 150 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த விமானத்தில் 5 எம்.பிக்களும் பயணித்தனர்.
இந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து இந்த விமானம் அவசரமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது தொழில் நுட்ப கோளாறை கண்டுபிடித்து விமானத்தை உடனடியாக விமானி தரை இறக்கியதால் பயணிகள் அனைவரும் உயிர் தப்பினர்.
இதனையடுத்து நள்ளிரவில் சென்னையில் இருந்து 12.30 மணிக்கு மாற்று விமானம் மூலம் அனைவரும் டெல்லி புறப்பட்டனர்.
இந்த விமானத்தில் பயணம் செய்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் எம்பி தமது எக்ஸ் பக்கத்தில், நள்ளிரவில் நடந்தது குறித்து பதிவிட்டிருப்பது தற்போது வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில், நள்ளிரவில் தாங்கள் பயணித்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. நடுவானில் விமானம் குலுங்கியது. இதனால் நாங்கள் அனைவரும் அச்சப்பட்டோம். பெரும் துயரத்தை எதிர்கொண்டோம். அந்த பயணம் பயங்கரமானதாக இருந்தது.
சென்னையில் நாங்கள் பயணித்த விமானம் அவசரமாக தரை இறங்க முயன்றது. ஆனால் அனுமதி கிடைக்காததால் வானிலேயே 2 மணிநேரம் வட்டமடித்தது எங்கள் விமானம். பின்னர் ஒருவழியாக விமானம் தரை இறங்கும் போது, அதே ஓடுதளத்தில் மற்றொரு விமானமும் வந்தது. இதனால் பயணிகள் அனைவரும் உயிர் பயத்தில் உறைந்து போனோம். விமானியின் திறமைதான் எங்கள் உயிரை காப்பாற்றியது. இதுபற்றி விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்திருந்தார்.
ஆனால், ஏர் இந்தியா விமான நிறுவனமோ இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. திருவனந்தபுரம் விமானம் சென்னையில் தரை இறங்கிய போது, அதே ஓடுதளத்தில் வேறு எந்த விமானமும் வரவில்லை என தெரிவித்துள்ளது.
