121.5 மில்லியன் டாலர் ரீஃபண்ட் தொகையை பயணிகளுக்குத் திரும்பத் தரவும் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
கோவிட் தொற்றின் போது தீவிரமான கட்டுப்பாடுகளால் பெரும்பாலான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டது.
அப்படி விமானம் ரத்து செய்யப்படும் பட்சத்தில், பயணிகளுக்கு அவர்களின் பணத்தைக் கூடிய விரைவில் திரும்பி அளித்து விட வேண்டும்.
ஆனால் ஏர் இந்தியா ரத்து செய்த பயணங்களுக்கு, பயணங்களை மாற்றியமைத்த பயணிகளுக்கு ரீஃபண்ட் தொகையை திரும்பத் தருவதில் (ரீஃபண்ட்) கால தாமதம் செய்து வந்துள்ளது.
இதனால் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் ஏர் இந்தியாவிற்கு 121.5 மில்லியன் டாலர் தொகையைப் பயணிகளுக்குத் திரும்பத் தரவும், அதோடு 1.4 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை கால தாமதத்திற்கான அபராதமாகவும் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் போக்குவரத்து அமைச்சகம் நவம்பர் 14 ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில்,
“2020 மார்ச் மாதத்திலிருந்து ஏர் இந்தியாவைக் குறித்த சுமார் 1900 புகார்கள் வந்துள்ளது. பணத்தைத் திரும்பச் செலுத்துமாறு சென்ற கோரிக்கைகளைச் செயல்படுத்த ஏர் இந்தியா 100 நாட்களுக்கும் மேலாக எடுத்துக் கொண்டுள்ளது.
இதனால் பயணிகள் தங்களது பணத்தைத் திரும்பப் பெறுவதில், ஏற்பட்ட தீவிர தாமதத்தால் பாதிக்கப்பட்டனர்’’ எனக் குறிப்பிட்டுள்ளது.
கோவிட் தொற்றின் போது கட்டுப்பாடுகளால் தொடர் சிரமத்தை அனுபவித்ததாகவும், அதனால் பயணிகளுக்குப் பணத்தைத் திரும்பத் தருவதில் பல சிக்கல்களை எதிர்கொண்டதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
அதோடு பயணிகளுக்குப் பணத்தைத் திரும்பத் தரவும் ஏர் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது.
ஏர் இந்தியாவைத் போன்று Frontier, TAP Portugal, Aero Mexico, EI AI மற்றும் Avianca போன்ற ஐந்து வெளிநாட்டு விமான நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து 600 மில்லியன் டாலர் பணத்தைத் திரும்பப் பயணிகளுக்குத் தரவும் மற்றும் அபராதமாகக் கொடுக்கவும் அமெரிக்க போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
-ராஜ்
