90 – களின் குழந்தைகள் மத்தியில் புகழ்பெற்ற தொலைக்காட்சி தொடரான ‘மர்மதேசம்’ தொடரின் இயக்குநரான நாகாவின் இயக்கத்தில் ’ஐந்தாம் வேதம்’ என்கிற வெப் சீரீஸ் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
இந்த வெப் சீரிஸின் டிரெய்லரை இன்று(அக்டோபர் 18) நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டார். சந்தோஷ் பிரதாப் மற்றும் சாய் தன்ஷிகா இந்த சீரிஸின் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த வெப் சீரிஸ் வருகிற அக்டோபர் 25 ஆம் தேதி முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரிஸின் டீசர் ஏற்கனவே சில தினங்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
’மர்மதேசம்’ போலவே இந்த வெப் சீரீஸும் அமானுஷ்யங்கள் கலந்த ஃபேண்டசி திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது என்பது வெளியான டீஸர், டிரெய்லர் மூலம் தெரியவருகிறது.
தன் தாயின் இறுதி சடங்கிற்காக சொந்த கிராமத்திற்கு செல்லும் சாய் தன்ஷிகா சந்திக்கும் அமானுஷ்ய மனிதர்கள், அவர்களால் தன்ஷிகாவிற்கு தெரிய வரும் ‘ஐந்தாம் வேதம்’ குறித்த ரகசியங்கள், அந்த ரகசியங்களைத் துரத்தி வரும் பிற கதாபாத்திரங்கள், அந்த ரகசியம் என்ன? அதை இத்தனை நபர்கள் தேடுவது ஏன்? சாய் தன்ஷிகாவிடம் இது கிடைத்ததற்கு காரணம் என்ன? போன்றவற்றை நோக்கி நகர்கிறது ‘ஐந்தாம் வேதம்’ வெப் சீரிஸ்.
ஆன்மிகம், அமானுஷ்யம் மட்டுமின்றி ஏ.ஐ போன்ற அறிவியல் சார்ந்த கூறுகளும் இந்த வெப் சீரீஸில் இடம்பெற்றுள்ளது.
‘ரகசியம்’ , ‘விடாது கருப்பு’ , ‘ எதுவும் நடக்கும்’ ஆகிய ‘மர்மதேசம்’ தொடரின் கிளைத் தொடர்களை இயக்கிய நாகா, திரையுலகத்திற்கு இயக்குநராக அறிமுகமானது 2010ஆம் ஆண்டில் இயக்குநர் சங்கர் தயாரிப்பில் வெளியான ‘ஆனந்த புரத்து வீடு’ மூலம் தான்.
அவரது பாணியிலேயே அமானுஷ்யங்கள் கலந்த திரில்லர் திரைப்படமாக வெளியான அந்தத் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன.
இருப்பினும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான போது அந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், அந்தப் படத்திற்குப் பிறகு பல ஆண்டுகள் கழித்து ’ஐந்தாம் வேதம்’ சீரிஸின் மூலம் இயக்குநர் நாகா ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரிஸில் ஒய்.ஜி.மகேந்திரன், பொன்வண்ணன், தேவதர்ஷினி, ராம்ஜி, மாத்யூ வர்கீஸ், கிரிஷ்ணா குரூப், விவேக் ராஜகோபால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஸ்ரீனிவாஸ் தேவராஜன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த சீரிஸின் படத்தொகுப்பு வேலைகளை ரெஜீஷ் மேற்கொண்டுள்ளார். ‘அயலி’ வெப் சீரிஸிற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ரேவா இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.
-ஷா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகாதேவ் தமன்னா மகாபாவம்பா … அஸ்சாமில் கோவிலில் வழிபட்டது ஏன்?
தேசிய கீதத்தில் திராவிடத்தை புறக்கணிப்பாரா ஆளுநர்? – கொந்தளித்த ஸ்டாலின்
தமிழ்த்தாய் வாழ்த்தில் தவிர்க்கப்பட்டதா திராவிடம்? – அடுத்த சர்ச்சையில் ஆளுநர்