அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழு இன்று (ஜூன் 16) சென்னை வருகிறது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். இந்தநிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு நேற்று விசாரணைக்கு வந்தபோது அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் காவேரி மருத்துவமனைக்கு செந்தில் பாலாஜியை மாற்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. மேலும் அமலாக்கத்துறை நியமிக்கும் மருத்துவ குழுவும் செந்தில் பாலாஜியை பரிசோதனை செய்யலாம் என்று உத்தரவிட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து நேற்று இரவு 9.30 மணியளவில் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்தநிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்ட அறிக்கையில், “கார்டியோ தொராசிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.ஆர்.ரகுராம் தலைமையிலான மருத்துவர்கள் குழு கண்காணிப்பில் செந்தில் பாலாஜி உள்ளார். அவருக்கு இதய பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய இக்குழு பரிந்துரைத்துள்ளது. செந்தில் பாலாஜிக்கு மயக்க மருந்து கொடுக்க உடற்தகுதி இருக்கிறதா உள்ளிட்ட சோதனைகள் நடத்தப்பட உள்ளன. அதன்பிறகு அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதல்படி செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான ஆலோசனைகளை வழங்க 5 மருத்துவர்கள் கொண்ட டெல்லி எய்ம்ஸ் குழு இன்று சென்னை வருகின்றனர்.
அவர்கள் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் செந்தில் பாலாஜி உடல்நிலையை பரிசோதனை செய்ய உள்ளனர்.
செல்வம்
அடாவடி போக்கில் ஆளுநர்: திருமாவளவன் விமர்சனம்!
மாநில முதல்வரா? குடும்ப முதல்வரா? ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!
