விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை திருச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் இன்று சந்தித்து பேசினார். AIADMK’s Vaigai Selvan Meets VCK Chief Thirumavalavan
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் அதிகமான தொகுதிகளைக் கேட்போம் என மதிமுகவின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் மற்றும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கூறி வருகின்றனர். திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் இந்த பேட்டிகள் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இது தொடர்பாக அண்மையில் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன், பில்டிங் ஸ்டிராங்… பேஸ்மன்ட் வீக் என்பதைப் போல திமுக கூட்டணி இருக்கிறது. திமுக கூட்டணியில் சலசலப்பு அதிகரித்துவிட்டது., 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து திருச்சியில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை வைகை செல்வன் நேற்று ஜூன் 15-ந் தேதி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நயினார் நாகேந்திரன், “இன்று காலை, முன்னாள் அஇஅதிமுக அமைச்சரும், எழுத்தாளரும், எனது நண்பருமான வைகைச் செல்வன் அவர்களைத் திருச்சியில் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. அவர் எழுதிய புத்தகங்களைப் பரிசாகப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி! என பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் திருச்சியில் இன்று விசிக தலைவர் தொல்.திருமாவளவனை அதிமுக முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தாம் எழுதிய “பேசு பேசு நல்லா பேசு” என்ற புத்தகத்தை திருமாவளவனிடம் வழங்கினார் வைகை செல்வன். இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
