இரண்டாவது நாளாக கூடும் சட்டப்பேரவை : அதிமுக திட்டம் என்ன?

Published On:

| By Kavi

தமிழக சட்டப்பேரவையில் இருந்து நேற்று போலவே இன்றும் வெளிநடப்பு செய்ய அதிமுக திட்டமிட்டுள்ளது.  AIADMK walks out of the assembly

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. 

தொடர்ந்து வரும் மார்ச் 21ஆம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் என்றும், மார்ச் 24 முதல் ஏப்ரல் 30 வரை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 

இதற்கிடையே பட்ஜெட் கூட்டத்தொடரை முன்னிட்டு நேற்று காலை 8.45 மணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறைக்கு வந்தனர். 

8.50 மணியளவில் தனது அறைக்கு வந்த எடப்பாடி பழனிசாமி, ‘டாஸ்மாக் ஊழலில் 1000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இதைக் குறிப்பிட்டு மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை ராஜினாமா செய்ய வலியுறுத்தி வெளிநடப்பு செய்ய வேண்டும்’ என்று கூறியிருக்கிறார். 

அதன்படி, தங்கம் தென்னரசு பட்ஜெட் வாசிக்க தொடங்கிய போது, டாஸ்மாக் ஊழல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி குரல் எழுப்பினார். தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்களும் கோஷம் எழுப்பி அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

ஆனால் அதிமுக முன்னாள் அமைச்சரும் கோபிசெட்டிபாளையம் எம்எல்ஏவுமான செங்கோட்டையன் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்திலும் பங்கேற்கவில்லை. அவர்கள் வெளிநடப்பு செய்யும்போது அவர்களோடு ஒன்றாகவும் செல்லவில்லை. 

இந்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று (மார்ச் 15) பட்ஜெட் கூட்டத்தொடர் கூடுகிறது. 

நேற்றைய தினம் போலவே இன்றும் வெளிநடப்பு செய்ய அதிமுக திட்டமிட்டிருக்கிறது. 

இன்று காலை 8.45 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட உள்ளனர். 

தொடர்ந்து, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தொடங்கியதும், டாஸ்மாக் ஊழல் குறித்தும் தமிழக பட்ஜெட் வெற்று பட்ஜெட் என்று கூறியும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்ய திட்டமிட்டு வருகின்றனர்.

இன்றைய தினம் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. AIADMK walks out of the assembly

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share