சட்டமன்றத்தில் 2வது நாளாக கடும் அமளி… அதிமுக வெளிநடப்பு!

Published On:

| By christopher

AIADMK walkout for 2nd day in tn Assembly

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் மூன்றாம் நாள் இன்று (ஜூன் 22) தொடங்கிய நிலையில், அவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பைத் தொடர்ந்து அதிமுகவினர் நேற்று கருப்பு சட்டை அணிந்து தமிழக சட்டமன்றத்துக்கு வந்தனர்.

கேள்வி நேரத்திற்கு பிறகு இவ்விவகாரம் குறித்துப் பேச வாய்ப்பு வழங்கப்படும் எனச் சபாநாயகர் கூறியும் கடும் அமளியில் ஈடுபட்டதால் அதிமுக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து சபைக்காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில் இன்றும் 2-வது நாளாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர்.

Image

அவை தொடங்கியதும் நேற்று போலவே இன்று கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு, கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக விவாதிக்கக் கோரி அமளியில் ஈடுபட்டனர்.

அதற்கு சபாநாயகர் அப்பாவு, “கேள்வி நேரத்திற்கு முன்பு அவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிப்பது சரியல்ல. விதிப்படி கேள்வி நேரம் முடிந்த பிறகு, பூஜ்ஜிய நேரத்தில் எந்த பிரச்னையை பற்றி நீங்கள் கேள்வி எழுப்பினாலும் அதற்கு நான் அனுமதி தருகிறேன். எதிர்க்கட்சி என்ற முறையில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவதற்கு தருவேன். நீங்கள் தாராளமாக உங்கள் கருத்தை பதிவு செய்யலாம்.

நான்கு வருடங்களாக முதலமைச்சராக இருந்த உங்களுக்கு சபை நடவடிக்கைகள் அனைத்தும் நன்றாகவே தெரியும். எனவே, நினைத்த நேரத்தில் நினைத்த தொகுப்பை பற்றி பேசும் இடம் இது இல்லை. நேரம் கொடுப்போம் அப்போது பேசுங்கள்” என்று சபாநாயகர்  கூறியும் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து ‘தமிழ்நாட்டு முதலமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்’ என முழக்கமிட்டு கொண்டே எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி? : திமுகவின் நீட் எதிர்ப்பு போராட்டம் ஒத்திவைப்பு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share