சட்டப்பேரவை அரங்கில் பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் இருக்கைக்கு சென்று அதிமுக முக்கிய புள்ளிகள் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. aiadmk seniors meets nainar
டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை கடந்த மார்ச் 25-ஆம் தேதி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மார்ச் 28-ஆம் தேதி அமித்ஷாவை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு தமிழகம் வந்த அண்ணாமலை கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கூட்டணி பற்றி அமித்ஷா சொல்வதையே இறுதியாக எடுத்துக் கொள்ள வேண்டும். நான் கூட்டணி பற்றி பேச விரும்பவில்லை’ என்றார்.
அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் ராஜினாமா செய்வேன் என்று சொன்னீர்களே? இப்போது அந்த நிலைமை வந்திருக்கிறதா? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, “அண்ணாமலை வார்த்தை மாறமாட்டான். நீங்க பாக்க தான் போறீங்க” என்று பதிலளித்தார்.
இந்தநிலையில், அண்ணாமலையை மாற்றுவது குறித்து கட்சி மேலிடம் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் வந்த நிலையில், சட்டமன்ற அரங்கிலேயே பாஜக சட்டமன்ற குழு தலைவரான நயினார் நாகேந்திரனை, அவர் இருக்கைக்கே சென்று எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை கூட்டியுள்ளது.
சுமார் பத்து நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், பாஜக தலைவர் பதவி மாற்றம் மற்றும் நயினார் நாகேந்திரன் தலைவராக வந்தால் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்று ஆர்.பி.உதயகுமார், கடம்பூர் ராஜூ ஆகியோர் விருப்பம் தெரிவித்தாக அதிமுக, பாஜக வட்டாரத்தில் சொல்கிறார்கள். aiadmk seniors meets nainar