அமித்ஷா என்ற தனி நபர் கூட்டணி குறித்து முடிவெடுக்க முடியாது. பாஜக உயர்மட்ட குழு எடுக்கிற முடிவு தான் இறுதியாக இருக்கும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று (ஜூன் 11) காலை 11 மணியளவில் சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தென்சென்னை நாடாளுமன்ற நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “தமிழகத்தை சேர்ந்தவர்கள் பிரதமராகும் வாய்ப்பை தமிழ்நாடு இரண்டு முறை தவறவிட்டுள்ளது. இதற்கு காரணம் திமுக தான். நாடாளுமன்ற தேர்தலில் குறைந்தது 25 தொகுதிகளில் வெற்றி பெறுவதற்கு உறுதி எடுப்போம். அனைத்து தொகுதிகளிலும் பூத் கமிட்டியை வலுப்படுத்துவோம்” என்று தெரிவித்தார்.
அமித்ஷா பேசியது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தேசிய கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலோ சட்டமன்ற தேர்தலோ தமிழகத்தில் அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை தாங்கும்.
கூட்டணியில் இடம்பெறக்கூடிய கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதற்கு இன்னும் நாட்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு 10 மாதங்கள் இருக்கக்கூடிய நிலையில் பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பிருக்கிறது என்று இலக்கை நிர்ணயிக்கலாம் ஆனால் குறிப்பிட்ட தொகுதியை இப்பொழுதே நிர்ணயம் செய்தது சரியானது அல்ல. கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பாகவே தென் சென்னை தொகுதி எங்களுக்கு என்று பாஜக கூறுவது நிபந்தனை போடுவது போல ஆகிவிடும்.
அமித்ஷா என்ற தனி நபர் கூட்டணி குறித்து முடிவு எடுக்க முடியாது. பாஜக உயர்மட்ட குழு எடுக்கிற முடிவு தான் இறுதியான முடிவாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
