அதிமுக – தவெகவுடன் ரகசிய கூட்டணியா?: ஆர்.பி.உதயக்குமார் பதில்!

Published On:

| By Kavi

விக்கிரவாண்டி மாநாட்டில் விஜய் திமுகவுக்கு எதிராக பேசியதை வரவேற்கிறேன் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (அக்டோபர் 28) செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது விக்கிரவாண்டியில் நடந்த தவெக மாநாடு குறித்தும் விஜய்யின் பேச்சு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த ஆர்.பி.உதயக்குமார், “நேற்று நடந்த மாநாடு என்பது சிறந்த துவக்கம். கொள்கை, கொடி பற்றி விஜய் சொல்லியிருக்கிறார்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று கூறியிருக்கிறார். அனைவரையும் சமதர்மமாக மதிக்க வேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்து மக்களுக்காக செயல்பட்டவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.

இன்று எதிர்ப்பு அலை காட்டுத்தீயாக பரவியிருக்கிறது. இளைஞர் தன்னெழுச்சியாக வந்திருக்கிறார்கள். ஆளும் அரசு மீதான வெறுப்புதான் இதற்கு காரணம்.

விஜய் மாநாட்டால் அதிமுகவுக்கு எள்முனையளவு கூட பாதிப்பு வருவதற்கு வாய்ப்பு இல்லை. ஏனென்றால் நாங்கள் ஆளும் கட்சியாக இல்லை.

நாங்கள் திமுகவை எதிர்த்து போராடுகிறோம். எங்கள் போராட்டக் களத்தின் மறுவடிவமாகத்தான் நாங்கள் அந்த மாநாட்டை பார்க்கிறோம்.

இதில் எண்ணங்கள் ஒன்றாக இருக்கிறது. எங்களுடைய எதிரியும் அவருடைய எதிரியும் ஒன்றுதான். மக்கள் நலன் என்ற சிந்தனை ஒன்றாக இருக்கிறது.

நேற்று அவர் பேசும் போது, ஒவ்வொரு மனிதனுக்கும் வீடு, உணவு, வேலை என்று சொல்லியிருக்கிறார். இது வரவேற்கக்கூடியது.

மீனும் பிடித்து கொடுப்போம், மீன் பிடிக்க கற்றும் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார். இதை வரவேற்கக்கூடியதாக பார்க்கிறோம்.

அதிமுக 52 ஆண்டுகால கட்சி, 32 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்திருக்கிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அதிமுகவை பற்றி யாராவது எதாவது சொன்னால் எங்களால் எதுவும் பண்ணமுடியாது. 30 சதவிகித வாக்கு வங்கியை ஃபிக்‌சட் டெபாசிட் போல் வைத்திருக்கிறோம்” என்றார்.

அவரிடம், அதிமுகவை பற்றி துளியளவு கூட விஜய் பேசவில்லை. ஏதெனும் ரகசிய கூட்டணி இருக்கிறதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், “கலை துறையும், தொழில் துறையும் ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்தது. சபரீசனை பார்க்காமல் தமிழகத்தில் யாரும் தொழில் தொடங்க முடியாத சூழல் உள்ளது. எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த சமயத்தில் திரைப்பட வெளியீட்டின் போது அரசின் ஒத்துழைப்பை நாடி விஜய் வந்தார். அவரது கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி உடனே நிறைவேற்றித் தந்தார். இந்த கருணை உள்ளத்தை புரிந்துகொண்டதன் காரணமாக, விமர்சிக்க வேண்டிய சூழல் இருக்காது. இதுதான் உண்மை” என்றார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்..

பிரியா

விமர்சனம்: Look Back!

தவெக கொள்கையும், நாதக கொள்கையும் ஒன்றா?: சீமான் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share