அதிமுக கட்சி விதிகள் திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு சென்னை வானகரத்தில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில் கட்சி விதிகளை திருத்தம் செய்ததை எதிர்த்தும், உட்கட்சி தேர்தலை எதிர்த்தும் கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிசாமியின் மகன் சுரேன் ஆகியோர் அதிமுக தொண்டர்கள் சார்பில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அதில், “அதிமுக பொதுச்செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. அதற்கு ஏற்ப விதிகள் திருத்தம் செய்யப்பட்டது. இது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன், கட்சி சட்ட விதிகள் திருத்தம் செய்யப்பட்டதற்கு எதிராக அதிமுக தொண்டர்கள் சார்பாக வழக்கு தொடர ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் இருவருக்கும் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார் அமர்வு விசாரித்தது.
அப்போது எடப்பாடி பழனிசாமி சார்பில், ராம்குமார் ஆதித்தன், சுரேன் இருவரும் கட்சியின் உறுப்பினர்கள் இல்லை. எனவே அதிமுக தொண்டர்கள் சார்பில் இவர்கள் வழக்குத் தொடர தனி நீதிபதி அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும். கட்சியில் அடுத்தடுத்து மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே இவர்கள் இருவரும் எழுப்பிய கேள்விகளும் காலாவதியாகிவிட்டன” என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
சுரேன் மற்றும் ராம்குமார் ஆதித்தன் சார்பில், “நாங்கள் இருவரும் கட்சியின் உறுப்பினர்கள் என்று ஆதாரங்களை சமர்ப்பித்ததால் தான் அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். எங்கள் வழக்குகள் காலாவதியாகவில்லை. எடப்பாடி பழனிசாமியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிடப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 29) தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில்குமார், “எடப்பாடி பழனிசாமியின் மனுவை ஏற்று… தொண்டர்கள் சார்பில் வழக்கு தொடர சுரேன், ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.
