டாஸ்மாக் 1000 கோடி ஊழல்: சட்டமன்றத்தில் அதிமுக முக்கிய நகர்வு!

Published On:

| By vanangamudi

டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை கடந்த மார்ச் 13-ஆம் தேதி அறிக்கை வெளியிட்ட நிலையில், இது தொடர்பாக விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக சார்பில் இன்று (மார்ச் 18) சபாநாயகரிடம் கவனயீர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. Aiadmk resolution liquor scam

கடந்த மார்ச் 6,7,8 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகம், தமிழ்நாடு முழுதும் இருக்கும் தனியார் மதுபான ஆலைகளின் அலுவலகங்கள், மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்கள் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

இது சம்பந்தமாக கடந்த மார்ச் 13-ஆம் தேதி அமலாக்கத் துறை வெளியிட்ட இரு பக்க அறிக்கையில், டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடுகள் நடந்திருப்பது தெரிய வந்துள்ளது என்றும் இது தொடர்பாக தொடர் விசாரணை நடக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது தமிழ்நாட்டு அரசியலில் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கிய மார்ச் 14ஆம் தேதி, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு தமிழ்நாடு அரசின் பதில் என்ன என கேள்வி எழுப்பினார்.

அன்று பட்ஜெட் தாக்கல் செய்து முடித்ததும் மதுவிலக்குத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இது தொடர்பாக சட்டமன்ற வளாகத்திலேயே, செய்தியாளர்களை சந்தித்து அமலாக்கத் துறையின் அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து இதை சட்டரீதியாக சந்திப்போம் என கூறினார்.

நேற்று (மார்ச் 17) தமிழக பாஜக சார்பில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாஜக நிர்வாகிகள் பலரையும் கைது செய்தனர்.

இன்னொரு பக்கம் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “நடவடிக்கை எடுக்க வேண்டிய அமலாக்கத் துறையை கையில் வைத்திருக்கும் பாஜக ஏன் தமிழ்நாட்டில் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கிறது? திமுகவும் பாஜகவும் மறைமுக கூட்டணி வைத்துள்ளன” என்று குற்றம் சாட்டினார்.

இந்த அரசியல் சூழ்நிலையில், தமிழ்நாடு சட்டமன்றத்தில், டாஸ்மாக் ஊழல் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என அதிமுக இன்று கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவர அனுமதி கேட்டு சபாநாயகரிடம் கடிதம் அளித்திருக்கிறது. இது தொடர்பாக சபாநாயகர் இன்னும் முடிவெடுக்கவில்லை என சட்டமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. Aiadmk resolution liquor scam

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share