அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்கில் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் முடிவெடுக்கும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இந்தநிலையில், அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி குமரேஷ் பாபு பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று உத்தரவிட்டார்.
தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனுத்தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இரண்டு தரப்பிலும் வாதங்கள் நிறைவடைந்த நிலையில் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தநிலையில் இரண்டு தரப்பும் இன்று எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளனர்.
ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமான வாதத்தில், “இந்த வழக்கில் நிவாரணம் கிடைக்கவில்லை என்றால் எங்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டதாக எந்த நீதிமன்றமும் கூறவில்லை. தான் ஒருங்கிணைப்பாளராக செயல்படுவதை எடப்பாடி பழனிசாமியால் தடுக்க முடியாது. இடைக்கால தடை மூலமாக இதனை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், “ஓபிஎஸ் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்களை கட்சியிலிருந்து ஜூலை 11, 2022-ஆம் ஆண்டு நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 8 மாதங்கள் மெளனம் காத்த மனுதாரர்கள் தற்போது தீர்மானத்திற்கு தடை கோர உரிமையில்லை.
2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவிற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை. தீர்மானத்தின் அடிப்படையில் தான் கட்சி செயல்பட்டு வருகிறது. கால தாமதமாக தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு செல்லத்தக்கதல்ல” என்று தெரிவித்திருந்தனர்.
இரண்டு தரப்புகளின் எழுத்துப்பூர்வமான வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர்.
செல்வம்
செந்தில் பாலாஜி வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!
மாமன்னன் படத்திற்கு தடை விதிக்க மறுப்பு!
“நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை” – அமைச்சர் பெரியகருப்பன்
லியோ பாடலுக்கு எதிர்ப்பு… படக்குழு செய்த மாற்றம்!
