மெரினாவில் நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கு சென்றதால் அதிமுக கூட்டத்துக்கு பலரும் வரவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 6) ராயபுரம் – ஸ்ரீ நா.பா மஹாலில் வடசென்னை தெற்கு(கி) மாவட்டம், ராயபுரம் மேற்கு பகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு புதிய உறுப்பினர் உரிமைசீட்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அதிமுக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஜெயக்குமார் கலந்துகொண்டு தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பல இருக்கைகள் காலியாக இருந்தன.
இதுதொடர்பாக பேசிய ஜெயக்குமார், “எப்போது ஆலோசனை கூட்டம் நடத்தினாலும், ஒரு ஆயிரம் பேராவது மண்டபத்தில் இருப்பார்கள். நாம் பத்து நாட்களுக்கு முன்பே இந்தக் கூட்டத்துக்கான ஏற்பாட்டை செய்துவிட்டோம்.
திடீரென்று மெரினா கடற்கரையில் விமானப்படை, ஏர்ஷோ நிகழ்ச்சியை நடத்தியது. அதனால் எல்லாரும் அதற்கு சென்றுவிட்டார்கள். கூட்டம் சற்று குறைவாக இருந்தாலும், ஏர்ஷோவை விட கட்சி தான் முக்கியம் என்று இதில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
அதிமுக சாதாரணமான சக்தி கிடையாது. 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்கள் இருக்கக்கூடிய இயக்கம். மிகப்பெரிய மலையை கூட நகர்த்த கூடிய சக்தி அதிமுக செயல்வீரர்களுக்கு உண்டு” என கூறினார்.
இன்று சென்னை மெரினாவில் விமானப்படை தினத்தை முன்னிட்டு சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் 15 லட்சம் பேர் கலந்துகொண்டனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஜெயக்குமார் இவ்வாறு பேசியது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. நீங்கள் தேதியை மாற்றியிருக்கலாமே என பலரும் கமெண்ட் செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா