அதிமுக அலுவலகத்திற்கு செல்ல கெடு முடிந்தது!

Published On:

| By Selvam

அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்ல நீதிமன்றத்தால் தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடு நேற்றோடு முடிந்த நிலையில், இன்று அதிமுகவினர் அக்கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் கடந்த ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்தப் பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராக,  எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பொதுக்குழு நடந்த அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் சென்றார்.

ADVERTISEMENT

இதனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கும், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதால், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.

ADVERTISEMENT

அதிமுக தலைமை அலுவலக சீலை அகற்றக்கோரி, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தனித்தனியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் ஜூலை 20-ம் தேதி நீதிபதி சதீஷ்குமார், அதிமுக தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்காக, ஒரு மாதம் கட்சி அலுவலகத்திற்கு தலைவர்கள், தொண்டர்கள் யாரும் வரக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து ஜூலை 22-ம் தேதி அதிமுக அலுவலக சீல் அகற்றப்பட்டது.

இந்தநிலையில், நீதிபதி வழங்கிய உத்தரவின் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதன்காரணமாக, இன்று முதல் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்கள், தலைவர்கள் வரலாம்.

அதிமுக அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் 18ம்- தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, விரிவான விசாரணை மேற்கொள்ளாமல் உயர்நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செல்வம்

அதிமுக பொதுக்குழு வழக்கு: தீர்ப்பின் சாராம்சம் என்ன?

Photo of author
Selvam
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share