‘அந்த தியாகி யார்?’… அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளி… சபாநாயகர் எடுத்த முடிவு!

Published On:

| By Selvam

‘அந்த தியாகி யார்?’ என சட்டமன்றத்தில் இன்று (ஏப்ரல் 7) கருப்பு பேட்ச் மற்றும் பதாகையுடன் வந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

சட்டமன்றத்தில் இன்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்று வருகிறது. aiadmk mlas walk out

இந்தநிலையில், டாஸ்மாக் மதுபான ஊழல் குறித்து விவாதிக்க வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘அந்த தியாகி யார்?’ என சட்டையில் பேட்ச் அணிந்து சட்டமன்றத்திற்கு இன்று காலை வருகை தந்தனர்.

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வந்தபோது, செந்தில் பாலாஜியின் தியாகம் பெரிது என்று ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டே ‘அந்த தியாகி யார்?’ என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பேட்ச் அணிந்து வந்தனர்.

இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,

“மறைந்த எம்.ஜி.ஆ-ரால் உருவாக்கப்பட்டு ஜெயலலிதாவால் வளர்த்தெடுக்கப்பட்ட அதிமுகவை அதற்கு பிறகு பொறுப்பேற்ற எடப்பாடி பழனிசாமி, தாங்கள் சிக்கியிருக்கும் பல்வேறு வழக்குகளில் இருந்து தப்பித்துக்கொள்வதற்காக, யாருடைய காலில் போய் விழுந்தார் என்று அனைவருக்கும் தெரியும்.

இதனால் நொந்து போய் நூடுல்ஸ் ஆக மாறியிருக்கிற அதிமுக தொண்டர்கள் தான் தியாகிகளாக மாறியிருக்கிறார்கள். முதல்வர் பதவி வாங்குவதற்காக காலில் விழுந்து அந்த அம்மையாரை ஏமாற்றி விட்டு போனாரே அவர் தான் இன்றைக்கு தியாகியாக இருக்கிறார்” என்று தெரிவித்தார்.

முதல்வரின் இந்த பேச்சை தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

சபாநாயகர் தனது முடிவை மாற்ற வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். இதனால் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் பேட்சை கழட்டி வைத்துவிட்டு சட்டமன்றத்திற்கு வர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்தார். பின்னர் அதிமுக உறுப்பினர்கள் கூட்டத்தொடரில் பங்கேற்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share