பாஜகவுடனான கூட்டணி ஆட்சி என்பது அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டுக்கும் செய்யும் துரோகம் என காங்கிரஸ் கட்சியின் எம்பி ஜோதிமணி கடுமையாக சாடியுள்ளார். AIADMK Joins the List of Parties Destroyed by BJP
மதுரையில் நேற்று நடைபெற்ற பாஜக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பிரதமராக மீண்டும் மோடி பொறுப்பேற்றார். ஒடிஷா, ஹரியானாவிலும் வெற்றி பெற்றோம். மகாராஷ்டிராவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றியைப் பதிவு செய்தது பாஜக. 2025-ம் ஆண்டு டெல்லியில் 27 ஆண்டுகளுக்குப் பின் பாஜக ஆட்சியைக் கைப்பற்றியது.டெல்லி போல 2026-ல் தமிழ்நாட்டில் பாஜக- அதிமுக கூட்டணி ஆட்சி கண்டிப்பாக அமையும் என பேசியிருந்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு குறித்து ஜோதிமணி எம்பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், மகாராஷ்டிராவில் சிவசேனா, அஸ்ஸாமில் அஸ்ஸாம் கண பரிசத், பஞ்சாபில் அகாலிதளம் கட்சிகள் தான் பாஜகவிற்கு சொற்ப இடங்களைக் கொடுத்து அந்த மாநில மக்களுக்கு அறிமுகப்படுத்தின. இப்பொழுது அந்த மாநிலங்களை பாஜக ஆளுகிறது. கூட்டணிக் கட்சிகள் போன இடம் தெரியவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளின் கதி இதுதான்.இதே கதி தான் அதிமுகவிற்கும் ஏற்படும். பாஜகவுடன் கூட்டணி ஆட்சி என்பது அதிமுகவுக்கு மட்டுமல்ல தமிழ் நாட்டிற்கும் செய்யப்படுகிற துரோகம் . இவ்வாறு ஜோதிமணி எம்பி பதிவிட்டுள்ளார்.