தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கியதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதனை தொடர்ந்து ஜூலை 11-ஆம் தேதி அதிமுகவில் செய்யப்பட்ட அமைப்பு ரீதியான மாற்றங்களை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது. இந்தசூழலில் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறவுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அதிமுகவில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேருவதாக இருந்தால் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மன்னிப்பு கடிதம் வழங்கி சேரலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் பின்பற்றப்பட்ட இந்த நடைமுறையை எடப்பாடி பழனிசாமியும் பின்பற்றினார்.
அதன்படி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட தேனி மாவட்டத்தை சேர்ந்த கடமலை மயிலை ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் முருக்கோடை எம்.பி இராமர், வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அன்னபிரகாஷ் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து கடிதம் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொண்டதால் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மன்னிப்பு கடிதம் கொடுப்பவர்கள் மீண்டும் கட்சியில் இணையலாம் என்று எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டவுடன் முதல் இணைப்பாக ஓ.பன்னீர் செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட நிர்வாகிகள் அதிமுகவில் மீண்டும் இணைந்துள்ளது முக்கிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செல்வம்