ADVERTISEMENT

ஜெயலலிதாவை விமர்சனம் செய்வதா? – அண்ணாமலையை பொளந்துகட்டும் ஜெயக்குமார்

Published On:

| By Selvam

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் பல நிர்வாகங்களிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழல் செய்ததாக முன்னாள் முதலமைச்சர்கள் சட்டப்படி தண்டிக்கப்பட்டுள்ளனர். ஊழல் செய்வதில் தமிழகம் தான் முதல் மாநிலமாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.

அண்ணாமலையின் இந்த கருத்திற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,

ADVERTISEMENT

“பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார். கத்துக்குட்டி அண்ணாமலைக்கு வரலாறு தெரியாது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதனால் அதிமுக தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர்.

ADVERTISEMENT

பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், எல்.முருகன் போன்ற தலைவர்கள் அதிமுகவுடன் தோழமை உணர்வுடன் செயல்பட்டனர்.

அண்ணாமலை பொறுப்பேற்ற நாள் முதல் கூட்டணி தர்மத்தை மீறி அதிமுகவை விமர்சனம் செய்து வருகிறார்.

ADVERTISEMENT

அமித்ஷா மற்றும் நட்டா உரிய முறையில் அண்ணாமலையை கண்டிக்க வேண்டும். கூட்டணி தர்மத்தை அண்ணாமலை மீறும் போது கூட்டணி தொடர்கிறதா இல்லையா என்ற கேள்விக்குறி எழும்.

இதற்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நட்டா மற்றும் அமித்ஷா தான். மாநில தலைவர் பொறுப்புக்கு தகுதி இல்லாதவர் அண்ணாமலை. பிரதான எதிரியான திமுகவை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தோழமை கட்சியை விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக, பாஜக கூட்டணி தொடரக்கூடாது, மோடி பிரதமராக வரக்கூடாது என்ற அடிப்படையிலேயே அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.

கர்நாடகாவில் தேர்தலுக்கு இவர் பொறுப்பேற்றதால் பாஜக தோல்வியை தழுவியது. கர்நாடகாவில் 40 சதவிகித ஊழல் குறித்து அண்ணாமலை பேச வேண்டும்.

20 வருடங்களுக்கு பிறகு சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்கள் வருவதற்கு அதிமுக தான் காரணம். அதிமுக தலைமையில் பாஜக இருக்கும் போது தான் அடையாளம் இருக்கும். கூட்டணியை முறிக்கும் செயலாக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார். அண்ணாமலையின் போக்கு தொடர்ந்தால் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்வோம்.

அதிமுக தரப்பிலிருந்து பாஜகவை விமர்சனம் செய்வதில்லை. அனைத்திற்கும் ஓர் எல்லை உள்ளது. கூட்டணி தர்மத்தை கடைபிடிக்கவில்லை என்றால் எங்களுக்கு இழப்பு இல்லை. அதனை டெல்லி உணர்ந்திருக்கிறது. அதிமுகவின் கண்டன குரல் டெல்லிக்கு கேட்கும்.

கூட்டணியை இறுதி செய்வது டெல்லி தலைமை தான். இதில் அண்ணாமலையின் பங்கு இல்லை.

காங்கிரஸ் கட்சியை எமெர்ஜென்சியின் போது திமுக கடுமையாக எதிர்த்தது. இருப்பினும் தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணியில் விமர்சனம் ஏற்படுவதில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக ஆலமரம், பாஜக செடி. தேசிய தலைமைக்கு எதிராக அண்ணாமலை செயல்பட்டு வருகிறார்.அண்ணாமலை அதிமுகவை விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

அதிமுக- பாஜக கூட்டணி மறுபரிசீலனை : ஜெயக்குமார் திட்டவட்டம்!

குழந்தை தொழிலாளர்கள் இல்லாத நிலையை உருவாக்குவோம்: சி.வி.கணேசன்

aiadmk jayakumar annamalai comment
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share