விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியை பல முறை கூட்டணிக்கு அதிமுக அழைத்தது, அதன் பிறகு தான் எங்களுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடந்தது என இன்று (மார்ச் 27) பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்துள்ளது பாமக. பாமகவிற்கான தேர்தல் அறிக்கையை இன்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அன்புமணி ராமதாஸ், “எடப்பாடி பழனிச்சாமி சொல்வது போல நாங்கள் வேடந்தாங்கல் பறவைகள் இல்லை. வேடந்தாங்கல் சரணாலயம்.
எங்களுடன் கூட்டணியில் இருப்பவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிறோம், வாழ்க்கை கொடுக்கிறோம், எங்களது உழைப்பை கொடுக்கிறோம்.
பாமக தரப்பில் முதலில் எடப்பாடி பழனிசாமியிடம் 16% இடஒதுக்கீடு கோரப்பட்டது.
ஆனால், அவர்கள் கொடுத்தது 10.5 சதவீதம். நாங்கள் மற்றவர்களுக்கும் இடஒதுக்கீடு கிடைக்கும் என இருந்தோம்.
பின்னர், இந்த 10.5% இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்தது.
10.5% இடஒதுக்கீடு ரத்தான பிறகு அதனை மீண்டும் கொண்டுவருவது பற்றி எடப்பாடி பழனிசாமி எதையாவது பேசினாரா?
கடந்த 6 மாதமாக, எடப்பாடி பழனிசாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.
நாம் தமிழர் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இறுதியில் யாரும், அதிமுகவுடன் கூட்டணிக்கு வரவில்லை. அதன் பிறகு தான், பாமகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆனால், நாங்கள் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளோம்.
திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாறாக ஒரு மாற்றம் வேண்டும் என்ற மனநிலையில் மக்கள் உள்ளார்கள்.
அதன் காரணமாகவே பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
அடுத்த தேர்தலை குறித்து இப்போதே சொல்ல முடியாது.
பாஜக கூட்டணியில் இருந்து கொண்டே நீட் தேர்வை வலிமையாக எதிர்ப்போம்.
பிரதமர் மோடியிடம் நீட் விவகாரம் குறித்து விளக்கி இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயல்வோம்.
இந்த கூட்டணி எங்களது சித்தாந்த கூட்டணி இல்லை. சமூகநீதி என்பது பாமகவின் அடிமட்ட கொள்கை.
எந்த கூட்டணியில் இருந்தாலும் அதனை ஒருதுளியும் விட்டுக்கொடுக்க போவதில்லை.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும்” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ராகுல் டிக் அடித்த வேட்பாளர்… மயிலாடுதுறையில் களமாடும் சிங்கப் பெண்… யார் இந்த சுதா?
தமிழ்நாட்டின் வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு ஏன் இந்த அவல நிலை?