அதிமுக உட்கட்சி விவகாரம்: தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் தயக்கம் ஏன்? உயர்நீதிமன்றம்

Published On:

| By Mathi

AIADMK ECI High Court

அண்ணா திமுகவின் உட்கட்சி விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது; இந்திய தேர்தல் ஆணையம் தமது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறுகிறது என்றுதான் அர்த்தம் என சென்னை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது. AIADMK High Court Election Commission

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்து அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது செல்லாது; அதிமுக உட்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும் வரை எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திண்டுக்கல் சூரியமூர்த்தி, பெங்களூர் புகழேந்தி, ராம்குமார் ஆதித்தன், ராமச்சந்திரன், சுரேன் பழனிசாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ADVERTISEMENT

சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்க அனுமதி தந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, இதற்கு எதிராக மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார். இதனையடுத்து, அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க தேர்தல் ஆணையத்துக்கான வரம்பு என்ன? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

பின்னர் தேர்தல் ஆணையம் இந்த வழக்கை விசாரிக்கலாம் என உத்தரவிடப்பட்டது. ஆனாலும், ஒரு கால வரையறை செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் மற்றொரு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமியின் மனு மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையில், தங்களிடம் மொத்தம் 6 புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இந்த புகார்களை ஒவ்வொன்றாக விசாரித்துதான் முடிவெடுக்க வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால் இதனை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கவில்லை.

இன்றைய விசாரணையின் முடிவில், இந்திய தேர்தல் ஆணையத்தை உயர்நீதிமன்றம் சாடியுள்ளது. அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தை விசாரிக்கும் கால வரையறை எது என்பதைக் குறிப்பிட்டு ஜூலை 21-ந் தேதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்; இந்த வழக்கில் உரிய நேரத்தில் உத்தரவு பிறப்பிக்காவிட்டால், இந்திய தேர்தல் ஆணையம் தமது அரசியல் சாசன கடமையை செய்ய தவறிவிட்டதாக அர்த்தமாகிவிடும். இந்த விவகாரத்தில் இந்திய தேர்தல் ஆணையம் தயக்கம் காட்டுவதாகவே தெரிகிறது என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது.

ADVERTISEMENT

இதனையடுத்து வரும் 21-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையம், அதிமுக விவகாரத்தில் குறிப்பிட்ட காலக்கெடுவை அறிவிக்கும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share