பொதுக்குழு தீர்மானங்கள்: வைத்திலிங்கம் புதிய மனு-எடப்பாடி பதிலளிக்க உத்தரவு!

Published On:

| By Selvam

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க இன்று (மார்ச் 17) உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தார்.

அதில், “மனோஜ் பாண்டியன் தொடர்ந்த வழக்கில் எந்த ஒரு முகாந்திரமும் இல்லை. அவர் கட்சியை விட்டு நீக்கப்பட்டு விட்டார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்து கொள்ளக்கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மனோஜ் பாண்டியன் வழக்கோடு சட்டமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் இருவரும் இன்று புதிதாக மனுத்தாக்கல் செய்தனர்

வைத்திலிங்கம், தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “கட்சியின் சட்டவிதிகளை பின்பற்றாமல் எங்களை நீக்கியுள்ளனர். சர்வாதிகார போக்குடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார்.

கட்சியிலிருந்து எங்களை நீக்கம் செய்ய பொதுக்குழுவிற்குக் கட்சி விதிகள் அதிகாரம் வழங்கவில்லை.

இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற பின் சட்டமன்றத்தில் எதற்காக கட்சி சாராத உறுப்பினராக நாங்கள் இருக்க வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.

மனோஜ் பாண்டியன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சலீம், “இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை இன்னும் கட்சி விதிகள் அங்கீகரிக்கவில்லை.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான் தற்போது வரை நீடிக்கிறது. இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி பதில் மனு தாக்கல் செய்தது தவறு” என்று வாதிட்டார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.வைத்தியநாதன், “பொதுக்குழு சட்டவிதிகளை பின்பற்றி தான் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், ஜேசிடி பிரபாகர், வைத்திலிங்கம் உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி குமரேஷ் பாபு இதுதொடர்பான உரிய பதில் மனுவை எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 11-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

செல்வம்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: தமிழக வீரர் உயிரிழப்பு!

பத்மாவதி தாயார் கும்பாபிஷேகம் கோலாகலம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share