அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்த ஓபிஎஸுக்கு தடை தொடரும் – சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

Published On:

| By Selvam

aiadmk flag symbol letter pad case verdict madras high court

அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 11) தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் கட்சியின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்தார்.

ADVERTISEMENT

இதனை எதிர்த்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற தனி நீதிபதி என்.சதீஷ் குமார், அதிமுகவின் பெயர் சின்னம், கொடி, லெட்டர் பேட் போன்றவற்றை ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

ADVERTISEMENT

தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் ஓ.பன்னீர் செல்வம் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், முகமது ஷபீக் அமர்வு விசாரித்து வந்தது.

ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மனோஜ் பாண்டியன்,

ADVERTISEMENT

“அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்ற உத்தரவின் அடிப்படையில் தனி நீதிபதி இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது.

எங்கள் தரப்பு வாதங்களை கேட்காமல் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது தவறு. எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி,

“அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் கட்சியின் சின்னம், கொடி ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்தி வந்ததால் வழக்கு தொடரப்பட்டது.

கட்சியில் உறுப்பினராக இல்லாத ஒருவர் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த முடியாது.

பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்பதால் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், ”அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை பயன்படுத்த ஓ.பன்னீர் செல்வத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும். தடையை எதிர்த்து தனி நீதிபதி முன்பு மீண்டும் மனுத்தாக்கல் செய்யலாம். இந்த வழக்கு தள்ளுபடி  செய்யப்படுகிறது” என்று தீர்ப்பளித்தனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு இவற்றையெல்லாம் எடுத்துச் செல்லாதீர்கள்!

சென்னையில் இன்று அயலகத் தமிழர் தின விழா!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share