அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணி: எடப்பாடி நம்பிக்கை!

Published On:

| By Selvam

parliament election strong alliance

அதிமுக தலைமையில் வலிமையான கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிசம்பர் 30) தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக தலைமையில் ஒரு வலிமையான கூட்டணியை அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திப்போம். புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

ஏற்கனவே திமுக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாட்டால் எந்த பயனும் கிடைக்கவில்லை. அதிமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் துவங்கப்பட்ட பணிகள் தான் தற்போது நடைபெற்று வருகிறது.

திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த ஒரு புதிய தொழிற்சாலையும் அமைந்ததாக தெரியவில்லை.

டிசம்பர் 4,5 ஆகிய தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் தமிழக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி மக்கள் அவதிக்குள்ளானர்கள்.

அதேபோல டிசம்பர் 17-ஆம் தேதி தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் முன்னெச்செரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை.

தாமிரபரணி ஆற்றில் இருந்து 1 லட்சம் கன அடி தண்ணீர் திறந்து விட்டதால் ஆற்றின் கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மூன்று நாட்களாக எந்த ஒரு அமைச்சரும் சென்று பார்க்கவில்லை.

ஆனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்வதாக அறிக்கை மட்டும் வெளியிடுகிறார்கள்.

வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களை பார்க்காமல் முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணி கூட்டத்தில் கலந்து கொள்கிறார்.

இதன் மூலம் மக்கள் மீது ஸ்டாலின் எவ்வளவு அக்கறை வைத்துள்ளார் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

சாலை விபத்தில் ஐயப்ப பக்தர்கள் பலி: நிவாரணம் அறிவிப்பு!

ஆளுநர் ரவியை சந்திக்கும் முதல்வர் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share