அதிமுக மாநாடு: சுங்கச்சாவடிக்கு ரூ.20 கோடி இழப்பு!

Published On:

| By Jegadeesh

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டுக்கு வந்த வாகனங்கள் சுங்கக்கட்டணம் செலுத்தாமல் சென்றதால், தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையரகத்துக்கு ரூ.20 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

மதுரை அருகே வலையங்குளத்தில் கடந்த 20ஆம் தேதி அதிமுக பொன்விழா மாநாடு நடந்தது. இதில் டன் கணக்கில் உணவு மற்றும் காய்கறிகளை வீணாக கீழே கொட்டினர். இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் விளக்கம் கொடுத்தாலும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் மற்றொரு குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதாவது மாநாட்டுக்கு வாகனங்களில் வந்தவர்கள், சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தவில்லை. பொதுவாக சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் மூலம் கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், பல அதிமுகவினர் பணம் செலுத்தாமல் வரிசைக்கட்டி செல்ல முயன்றனர்.

இதை சுங்கச்சாவடி ஊழியர்கள் தட்டி கேட்டனர். இதனால் அதிமுகவினருக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வேறு வழியின்றி சுங்கச்சாவடி ஊழியர்களும், கட்டணம் வசூலிக்காமல் மாநாட்டு வந்த வாகனங்களைச் செல்ல அனுமதித்தனர். இதை பயன்படுத்தி மாநாட்டுக்குச் சென்ற வாகனங்களின் பின்னால் சரக்கு வாகனங்கள் உள்ளிட்ட மற்ற வாகனங்களும் சென்றுள்ளன.

இதனால், மாநாடு நடந்த 20ஆம் தேதி மட்டும் ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும் தினசரி வருவாயில் 5 சதவிகிதம் வரை குறைந்துள்ளது. மாநாட்டுக்கு வந்த வாகனங்களில் நான்கு சக்கர வாகனங்களை மட்டும் கணக்கிட்டால், கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததாக கூறப்படுகிறது. இவை அனைத்தும் சுங்கக் கட்டணம் செலுத்தாததால், ஒரே நாளில் 20 கோடி ரூபாய் வரை, தேசிய நெடுஞ்சாலை ஆணையரகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜ்

நிலவில் இந்தியா: சந்திரயான் 3 திட்ட இயக்குநர் சொல்வது என்ன?

நிலவில் தரையிறங்கியது எங்கே?: புகைப்படம் அனுப்பிய லேண்டர்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share