டிஜிட்டல் திண்ணை: அதிமுக மாநாடு… எடப்பாடியோடு காரில் சென்ற தீர்மானங்கள்!

Published On:

| By Kavi

AIADMK Conference resolution taken by edappadi palanisamy car

* வைஃபை ஆன் செய்ததும் அதிமுகவின் மதுரை மாநாடு ஏற்பாடுகள் பற்றிய செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

ADVERTISEMENT

“அதிமுகவின் மதுரை மாநாட்டுக்கு தடபுடலான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றன. அதிமுகவின் வரலாற்றில் மாநாட்டுக்கு திமுகவைப் போல அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதில்லை. ஆனாலும் அதிமுக மாநாடுகளை நடத்தாமலும் இருந்ததில்லை. எம்.ஜி.ஆர். காலத்திலேயே அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவராக முசிறி புத்தன் இருந்தபோது மாநாடுகள் நடத்தியிருக்கிறார்கள்.

ஜெயலலிதா 96 தோல்விக்குப் பிறகு மாநாடு நடத்தினார். கடைசியாக 2010-11 இல் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது மண்டல மாநாடுகளை நடத்தினார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அதிமுகவில் முறைப்படியான மாநாடுகள் நடத்தப்படவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில்தான் இப்போது மதுரையில் ஆகஸ்டு 20 ஆம் தேதி மாநாடு கூட்டியிருக்கிறார் எடப்பாடி. பலத்த எதிர்பார்ப்புகள் அக்கட்சித் தொண்டர்களிடையே எழுந்துள்ளன.

ADVERTISEMENT

மாநாடு வளாகத்தில் தொண்டர்கள் அமர 1.25 லட்சம் நாற்காலிகள், காலை 7 முதல் இரவு 7 வரை உணவு வழங்க ஏற்பாடு, உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10,000 பேர் பணி, மூன்று இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டில் உணவு வழங்கவும், அமர்ந்து சாப்பிட டேபிள் நாற்காலிகளும் ஏற்பாடு, மாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள், மதுரை மாநகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு,

வாகனங்களை நிறுத்த 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு, 15க்கும் மேற்பட்ட இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். மாநாட்டை காலை 8 மணிக்கு அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்க உள்ளார்.

அதிமுகவின் பொன் விழா மாநாடான இந்த மாநாட்டில் என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன என்பதும், எடப்பாடி என்ன பேசப் போகிறார் என்பதும் அக்கட்சித் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டணியாக முதலில் இதை நடத்தலாம் என்றும், பிரதமர் மோடியை கூட அழைக்கலாம் என்றுதான் எடப்பாடி முதலில் ஆலோசித்தார்.  சேலத்திலேயே இதுகுறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

ஆனால், அப்படி நடந்தால் அதிமுகவின் தனித்துவம் போய்விடும், தங்களால்தான் கூட்டம் சேர்ந்தது என்று பாஜகவினர் கூச்சம் இல்லாமல் கூறுவார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து அந்த ஆலோசனையையே அப்போதே கைவிட்டுவிட்டர்கள்.

இந்த நிலையில்தான் மாநாட்டுத் தீர்மானங்கள் என்ன என்றும், மாநாட்டில் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் போன்றவர்கள் என்ன பேசுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதிமுக மாநாட்டில் தொண்டர்களின் ரியாக்‌ஷனை அதாவது பாஜகவோடு கூட்டணி கூடாது என்ற கருத்தை கே.பி.முனுசாமி, சி.வி. சண்முகம் போன்றவர்கள் மூலம் பேச வைத்து அதன் பின் நிறைவாக பொதுச் செயலாளர் எடப்பாடி பேசுவார் என்கிறார்கள் அதிமுக தரப்பில்.

மேலும் மாநாடு என்றாலே தீர்மானங்கள்தான் முக்கியம். இந்த மாநாட்டிலும் தீர்மானக் குழு தலைவராக மூத்த தலைவரான சி.பொன்னையன் நியமிக்கப்பட்டு தீர்மான குழுவில் தம்பிதுரை, ஜெயக்குமார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களிடம் கருத்துகளைப் பெற்று தீர்மானங்களை சேலத்துக்கே சென்று தயார் செய்தார். பிறகு தீர்மானங்கள் எடப்பாடி பழனிசாமியின் பல்வேறு திருத்தங்களுக்குப் பிறகு சேலத்திலுள்ள அவரது வீட்டிலேயே வைக்கப்பட்டன. சென்னையில் தயாரித்தால் தீர்மானம் லீக் ஆகிவிடும் என்று கருதி முழுக்க முழுக்க சேலத்தில் தனது வீட்டிலேயே தயாரித்திருக்கிறார் எடப்பாடி.

இன்று (ஆகஸ்டு 19) பிற்பகல் சேலத்தில் இருந்து மதுரைக்கு மாநாட்டுக்காக புறப்பட்ட எடப்பாடி பழனிசாமியின் காரிலேயே தீர்மானப் புத்தகமும் எடுத்துச் செல்லப்பட்டது. அந்த அளவு தீர்மானங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் எடப்பாடி என்கிறார்கள் அதிமுக நிர்வாகிகள்.

இவ்வளவு எதிர்பார்ப்பை மாநாடு நிறைவேற்றுமா அல்லது மத்திய அரசில் பாஜகவுடன் இணக்கப் போக்கை ஏற்படுத்தி மாநில தலைவர் அண்ணாமலையை மட்டும் விமர்சனம் செய்யும் நிகழ்வாக இருக்குமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் மாநாட்டை டெல்லி பாஜக தலைமையும் கூர்மையாக பார்த்துக் கொண்டிருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!

கூமர் – விமர்சனம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share