மத்திய அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு!

Published On:

| By Selvam

Aiadmk announces protest against Bjp

கடந்த 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாஜக உடனான கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியது. இரண்டு கட்சிகளும் தனித்தனியாக கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க வியூகங்களை வகுத்து வருகின்றன.

இந்தநிலையில், மத்திய அரசுக்கு எதிராக அதிமுக ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருப்பது அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

திருச்சி மாவட்டம் துவாக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடியை அகற்ற வலியுறுத்தி அதிமுக சார்பில் பிப்ரவரி 23-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப்ரவரி 16) அறிவித்துள்ளார்.

Aiadmk announces protest against Bjp

ADVERTISEMENT

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி, திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் (NH-67), வாளவந்தான் கோட்டையில் அமைந்துள்ள சுங்கச் சாவடியானது சுமார் 13 வருடங்களுக்கு மேலாக சுங்கக் கட்டணம் வசூல் மையமாக செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில், துவாக்குடி முதல் ஜீயபுரம் வரையிலான 24 கிலோ மீட்டர் கொண்ட அரைவட்ட சுற்றுச் சாலையின் தொடக்கத்திலேயே, வாளவந்தான்கோட்டை சுங்கச் சாவடிக்கு அரை கிலோ மீட்டர் இடைவெளி கூட இல்லாமல், துவாக்குடியில் புதிதாக சுங்கச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதனையடுத்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ப. குமார், பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு, மத்திய அரசு விதிகளின்படி அருகருகே இரண்டு சுங்கச் சாவடி அமைக்கக்கூடாது என்பதை சுட்டிக்காட்டி கடந்த 21.11.2021 அன்று மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

“60 கிலோ மீட்டர் இடைவெளிக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் மூன்று மாதங்களுக்குள் அகற்றப்படும்”என்று 22.3.2022 அன்று மக்களவையில் நடைபெற்ற விவாதத்தின்போது துறை அமைச்சர் கூறியதை மேற்கோள் காட்டி, மீண்டும் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் தலைவர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் பார்வைக்கும் கடிதம் எழுதினார்.

இக்கோரிக்கையை நிவர்த்தி செய்திட அதிமுக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டும் வந்துள்ளது. இந்நிலையில், தற்போது சுங்கச் சாவடி பணிகள் முடிவுற்று 14.2.2024 அன்று முதல் சோதனை முறையில் கட்டணங்கள் அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இதன் காரணமாக வாகனங்களில் பயணிக்கும் மக்கள் அரை கிலோ மீட்டருக்குள் இரண்டுமுறை சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டிய நிலை உள்ளது.

மக்கள் விரோத இச்செயலுக்கு, திமுக அரசும், திருவெறும்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் திருச்சி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் இதுவரையில் எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருவது வேதனைக்குரிய விஷயமாகும்.

இந்நிலையில், பொதுமக்களை நேரடியாக பாதிக்கின்ற வகையில்,  எதிராக செயல்பட்டு வரும் மத்திய அரசையும், தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய நிர்வாகத்தையும், மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத திமுக அரசையும் கண்டித்தும் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சுங்கச் சாவடியை அகற்ற வலியுறுத்தியும் அதிமுக திருச்சி புறநகர் தெற்கு மாவட்டத்தின் சார்பில், 23.2.2024 வெள்ளிக் கிழமை மாலை 5 மணியளவில், துவாக்குடி பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கரூர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையிலும், திருச்சி புறநகர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ப. குமார் முன்னிலையிலும் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஜெயம் ரவியின் ‘சைரன்’ எப்படி இருக்கிறது?- Public Review

காங்கிரஸ் வங்கி கணக்குகள் முடக்கம்: அஜய் மக்கான் புகார்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share