அதிமுகவும், பாஜகவும் மக்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்படும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், சேலம் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், திமுக முதன்மை செயலாளருமான கே.என்.நேரு தலைமையில் இன்று (ஜூன் 10) ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளரும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்தார்.
அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு தோல்வியை மட்டுமே பெற்றிருக்க கூடிய கட்சிதான் அதிமுக.
ஆட்சியில் இருந்த போதே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தது. தோல்வி மேல் தோல்வி அடைந்த கட்சி.
ஊர்ந்துபோய் முதலமைச்சர் பதவியை பெற்று, சசிகலா காலை வாரிவிட்டு, பாஜகவுக்கு பல்லக்கு தூக்கிக் கொண்டு, தனது நாற்காலியை காப்பாற்றிக் கொண்டு, 4 ஆண்டு காலம் காலத்தை தள்ளியவர் எடப்பாடி பழனிசாமி.
மூழ்கிக் கொண்டிருக்கும் இரண்டு பேர் கை கோர்ப்பது போல் இருக்கின்றன அதிமுகவும் பாஜகவும். அதிமுகவில் ஒருவருக்கு ஒன்றிய அமைச்சர் பதவி கொடுக்க இருக்கிறார்கள் என்று ஒரு செய்தி பத்திரிகைகளில் வருகிறது.
இது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. தமிழ்நாட்டுக்கு தாங்கள் செய்யும் தவறுக்கு அதிமுகவையும் பொறுப்பாக்கும் தந்திரமாகக் கூட இருக்கலாம்.
இந்த செய்தியை பார்க்கும் போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஆற்றில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து வருகிறது.
அப்போது பல பொருட்கள் வெள்ளத்தில் அடித்துக்கொண்டு போகிறது. கரையில் நின்று கொண்டிருந்த மக்கள், அடித்துச் செல்லும் அந்த பொருட்களில் நமக்கு ஏதேனும் அகப்படாதா என காத்துக்கொண்டிருந்தனர்.
அப்போது கருப்பு வண்ணத்தில் பெரிதாக ஒன்று உருண்டு வந்தது. அதை எடுக்க பலருக்கும் போட்டி. ஒரு ஆள் அதை கைப்பற்றிக் கொண்டார். அதன்பின் தான் தெரியவந்தது அது கரடி என்று.
இப்போது அந்த ஆள் கரடியை விட தயாராகிவிட்டார். ஆனால் கரடி அந்த ஆளை விட தயாராக இல்லை.
அந்த ஆளும், கரடியும் போன்றதுதான் அதிமுகவும் பாஜகவும். இருவருமே மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவார்கள்” என்றார்.
மேலும் அவர், “திராவிட மாடல் இந்திய அளவில் ஓங்கி ஒலிக்க தொடங்கியிருக்கிறது.
தெற்கில் இருந்து எழும் இந்த குரலை, வடக்கில் சிலரால் பொறுத்து கொள்ள முடியவில்லை. ஏவல் அமைப்புகளை எல்லாம் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைப்பார்கள்.
யார் வந்தாலும் இந்த ஸ்டாலினும், திமுகவும் அஞ்சப்போவதில்லை” என்று குறிப்பிட்டார் மு.க.ஸ்டாலின்.
பிரியா
”அரசின் ஒத்துழைப்போடு பட்டின பிரவேச நிகழ்வு ”- சூரியனார் கோயில் ஆதீனம்!
பட்டியல் கொடுக்க தயாரா?” : அமித்ஷாவுக்கு ஸ்டாலின் சவால்!

