2026ல் 210 தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்: எடப்பாடி பழனிசாமி பேச்சு!

Published On:

| By Kavi

2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 10) நடைபெற்றது. 

ADVERTISEMENT

அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன் உடல் நலக்குறைவு காரணமாக கலந்து கொள்ளாததால் துணைப் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி இந்த பொதுக்குழுவை வழி நடத்துவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். 

இதைத்தொடர்ந்து அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பேசினர். 

ADVERTISEMENT

இறுதியாக எடப்பாடி பழனிசாமி பேசுகையில், “தீய சக்தி திமுகவை அழிப்பதற்காக எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கினார். எம்ஜிஆர் ஜெயலலிதா என அதிமுக தலைவர்களுக்கு தமிழ்நாடு மக்கள்தான் வாரிசு.

அதிமுக இருக்கிற காரணத்தினால் தான் ஊடகமும் பத்திரிக்கையும் இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற நிலை உள்ளது. 

ADVERTISEMENT

நான் முதலமைச்சரானபோது அதன் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நேரத்தில் திமுகவினர் மேஜை மீது ஏறி நடனம் ஆடினார்கள். சபாநாயகரை இழுத்து தள்ளி அவரது இருக்கையில் அமர்ந்தார்கள். அவரது மைக் உடைக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளை எல்லாம் ஏற்படுத்தியவர் இன்றைய முதல்வர் ஸ்டாலின்’ என்று குறிப்பிட்டார். 

2026 தேர்தல் தொடர்பாக பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 தேர்தலில் 210 இடங்களில் வெற்றி பெறும். 

2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி 75 இடங்களில் வெற்றி பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வாங்கிய வாக்கு சதவிகிதம் 23.5 % ஆகும். பாஜக 18 சதவிகிதம் வாங்கியது. மொத்தமாக 41.33 சதவிகித வாக்குகள் பெற்றோம்’ என்று தெரிவித்தார்.

திமுக 2021 இல் வழங்கிய பல வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால், தற்போது 30 லட்சம் பேருக்கு கூடுதலாக மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறார். மக்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அதை வாங்கிக்கொண்டு அதிமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். 

மக்களின் செல்வாக்கை ஸ்டாலின் இழந்துவிட்டார். 2026 தேர்தலில் மக்களை எதிர் கொள்ள முடியாமல் தற்போது அதை சரி செய்வதற்காக மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். 

மாணவர்களின் நலன் கருதி லேப்டாப் வழங்கப்படவில்லை. நான்காண்டுகளுக்கு பிறகு தேர்தல் பயத்தினால் அம்மா லேப்டாப் திட்டத்தை மீண்டும் தொடங்கி இருக்கிறார் ஸ்டாலின். 

பாஜகவோடு அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது என்று தான் விமர்சிக்க முடியும். ஆனால் குறை கூற முடியாத அளவிற்கு நாங்கள் ஆட்சியை நடத்தினோம். அதுபோன்ற ஒரு ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவோம்’ என்றும் சூளுரைத்தார். 

விவசாயிகளுக்கு திமுக அரசு அநீதி இழைக்கிறது என்று தெரிவித்த அவர், விவசாயிகள் போராட்டம் நடத்தினால் குண்டர் சட்டத்தில் கைது செய்கிறார்கள். விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. 

மின் கட்டணம் 52 சதவிகிதம், வீட்டு வரி நூறு சதவிகிதம், கடை வரி 150 சதவிகிதம் என வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறார் ஸ்டாலின்’ என்று திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share