ADVERTISEMENT

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்: கேரியர் கைடன்ஸ் சொல்லும் ‘AI’ டூல்! பள்ளிக்கல்வித் துறையின் அதிரடி பிளான்!

Published On:

| By Santhosh Raj Saravanan

ai in tamilnadu government schools

சென்னை:
12ஆம் வகுப்பு முடித்தவுடன் “அடுத்து என்ன படிப்பது? எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பது?” என்ற குழப்பம் மாணவர்களையும், பெற்றோர்களையும் ஆட்டிப்படைப்பது வழக்கம். குறிப்பாக, போதிய வழிகாட்டுதல் இல்லாத கிராமப்புற மாணவர்களுக்கு இது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது.

9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அவர்களின் எதிர்கால உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் குறித்த தெளிவை ஏற்படுத்த, செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் பிரத்யேக செயலி (App) ஒன்றை உருவாக்கப் பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

ADVERTISEMENT

AI தொழில்நுட்பம் எப்படி உதவும்?

இது குறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் பி. சந்திரமோகன் முக்கியத் தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதன்படி, மாணவர்கள் பள்ளியில் பயிலும்போதே அவர்களின் கல்வித் திறன், தனிப்பட்ட ஆர்வங்கள் மற்றும் செயல்பாடுகள் இந்தச் செயலி மூலம் பகுப்பாய்வு செய்யப்படும்.

ADVERTISEMENT

“மாணவர்களின் கடந்தகாலத் தேர்ச்சி விவரங்கள் மற்றும் அவர்களின் விருப்பங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்குப் பொருத்தமான உயர்கல்விப் படிப்புகள் மற்றும் கல்லூரிகளை இந்த AI செயலி பரிந்துரைக்கும். ஒருவேளை மாணவர் தனது வழக்கமான துறை அல்லாத மாற்றுத் துறையில் ஆர்வம் காட்டினால், அந்தத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்தும் இது விரிவான தகவல்களை அளிக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

EMIS உடன் இணைப்பு

ADVERTISEMENT

ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் EMIS (Educational Management Information System) இணையதளத்துடன் இந்த புதிய AI செயலி இணைக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் தரவுகளையும் எளிதாகக் கையாள்வதுடன், அவர்களுக்குத் துல்லியமான வழிகாட்டுதலை வழங்க முடியும் எனத் தெரிகிறது.

ஏன் இந்த மாற்றம்?

கடந்த 2022ஆம் ஆண்டு முதலே, அரசுப் பள்ளிகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை (Gross Enrolment Ratio) உயர்த்தும் நோக்கில், பாடத்திட்டத்திலேயே ‘Career Guidance’ எனப்படும் உயர்கல்வி வழிகாட்டுதல் இணைக்கப்பட்டது. ஹை-டெக் லேப்கள் மூலம் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த ஆண்டு மட்டும் சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் நேரடியாகக் கல்லூரிகளுக்கே அழைத்துச் செல்லப்பட்டு கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சூழலில், அடுத்த கல்வியாண்டு (2026-27) முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ள இந்த AI செயலி, “நான் முதல்வன்” திட்டத்தின் நோக்கத்தை மேலும் வலுப்படுத்தும் என்றும், மாணவர்கள் சரியான முடிவை எடுக்க இது ஒரு கேம் சேஞ்சராக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவை நனவாக்க, தொழில்நுட்பத்தைக் கையில் எடுத்துள்ள தமிழக அரசின் இந்த முயற்சி கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share